நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் தொட்டு தந்தை பெரியாரை நிழல்போலத் தொடர்ந்த -
கொள்கைச் செம்மல் -இயக்கத்தைத் தவிர வேறு எதையும் சிந்தித்தும் பார்த்தறியாத எளிமையின் வடிவம் திருவாரூர் (பவித்திர மாணிக்கம்)
அண்ணன் சிவசங்கரன் இதே நாளில் கடந்த ஆண்டு தமது 89ஆவது வயதில் மறைவுற்றார்.
விவசாயக் குடும்பம்
- தன் பிள்ளைகளை (பெண்கள் உட்பட) படிக்க வைத்து ஒரு நிலைக்கு உயர்த்தியவர்.
1957 நவம்பர் 26இல் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். சிறையில் அவர் இருந்த நேரத்தில் அவரின் ஆருயிர் துணைவியார் மறைந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கலங்கினார் - ஆனாலும் பரோலில் வெளியில் வந்து துணைவியாரின் இறுதி நிகழ்ச்சிக்குக்கூடச் செல்ல மறுத்துவிட்டார்.
பேரிழப்புதான்! பெருந்துயரந்தான்!!
ஆனாலும்,
மரணம் என்பது தவிர்க்க இயலாதது; நான் போய் என்ன செய்யப் போகிறேன்? என்று கூறினார்.
உண்மையில் இந்தப் பதிலைக் கேட்டவர்கள்தான் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்;
அந்த அளவுக்கு அய்யா கொள்கையில் முதிர்ச்சி பெற்ற பகுத்தறிவாளர் அவர்!
அதேபோல மிசா காலத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார்! அவையெல்லாம் அவருக்குச் சர்வ சாதாரணம்!
இன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கென்று ஓர் எழிலார்ந்த கட்டடம் கம்பீரமாக உருவாகி நிற்கிறது.
மாவட்டத் தலைவர் மானமிகு எஸ்.எஸ்.மணியம், மறைந்த அவரின் துணைவியார் இராசலட்சுமி அம்மையாரின் அரிய முயற்சியும், ஈடுபாடும்தான் இதற்குக் காரணம் என்றால், அந்தக் கட்டடத்தின் அஸ்திவாரம் அண்ணன் சிவசங்கரன்தான்!
அவர் மாவட்டத் தலைவராக இருந்தபோதுதான் அந்த அடிநிலம் வாங்கப்பட்டது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அவர் - நாணயத்தின் சின்னம்!
திருவாரூரில் நடைபெற்ற நகர மன்ற தேர்தல் செலவுக்காக தன்னிடம் அளிக்கப்பட்ட நிதியில் செலவு போக, எஞ்சிய ரூபாயையும்,
பைசாவையும் கணக்கெழுதி ஓர் அரசியல் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தபோது
- அக்கட்சித் தலைவர் தம் கட்சிக்காரர்களைப் பார்த்து பார்த்தீர்களா, இவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள் என்று பெருமிதத்துடன் கூறினார் என்றால், அண்ணனின் பெருமைக்கு ஈடு ஏது?
89 வயது அந்த இளைஞரை இன்றைய இளைஞர்கள் பின்பற்றட்டும்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
8.6.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக