அறிவியல் விஞ்ஞானி கலிலியோ பிறந்த நாள் இந்நாள்
(1564).
மனித குல வளர்ச்சியில்,
அறிவியல் சிந்தனையில் அவ்விஞ்ஞானி எடுத்து வைத்த அடி மகத்தானது;
வைர எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.
பூமி தட்டை என்று கருதப்பட்டது;
பைபிளில் அவ்வாறு கூறப்பட்டது
- தெய்வ சம்பந்தமானது என்று மதிக்கப்பட்ட காலகட்டம் அது. அதனை முதலில் உடைத்தெறிந்த அறிஞன் கோபர் நிக்கஸ்.
பூமி தட்டையல்ல
- உருண்டை என்று உரைத்தான்.
சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்றான். அவன் சொன்னான் - அதனை நிரூபித்துக் காட்டியவன் கலிலியோ. தொலைநோக்குக் கண்ணாடியை உருவாக்கி அதன்மூலம் மெய்ப்பித்தான்.
வைதிக உலகம் ஏற்றுக் கொள்ளுமா? இவன் பித்தன் - இயேசு மொழிக்கு விரோதமானவன் - விவிலியத்துக்கு
மாறான கருத்தைச் சொல்லும் கயவன் என்று கத்தோலிக்கத் திருச்சபை குற்றம் சாட்டியது
- சிறையில் தள்ளியது (1633 ஜூன் 22) சிறையிலேயே
78-ஆவது வயதில் அவ்விஞ்ஞானி மரணமுற்றான் (1642).
கத்தோலிக்க மத பீடம் அன்று செய்த தவறுக்குக் கழுவாயை 360 ஆண்டுகளுக்குப் பின் தேடிக்கொண்டது.
கலிலியோவின் கண்டுபிடிப்புபற்றி ஆராய ஜான் போப் ஒரு குழுவை நியமித்தார்.
அந்தக் குழுவின் அறிவிக்கையைத் தொடர்ந்து கலிலியோ அன்று சொன்னது சரியானதே என்பதை அறிவாளிகளும், விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்றவர்களும் நிறைந்த சபைக்கு அறிவித்தார்.
மற்றவர்கள் செய்த பாவங்களுக்கெல்லாம் பாவ மன்னிப்பு வழங்கும் போப்பாண்டவரே வரலாற்றில் தன் மூதாதையர் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரும் நிலையல்லவா ஏற்பட்டு விட்டது! ஆம்! விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட்டுத்தான் தீரும் என்பதற்கு
- இந்த நூற்றாண்டில் கிடைத்த மாபெரும் நிரூபணம் இது என்பதிலும் அய்யம் உண்டோ?
கலிலியோ பிறந்த இந்நாளில் விஞ்ஞானக் கருவிகள் வந்தால் மட்டும் போதாது - மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையும் வளரவேண்டும் - வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுப்போம்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
15.2.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக