வியாழன், 3 ஆகஸ்ட், 2017

பே(வே)தம்!


கேள்வி: புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படங்களை, விக்ரகங்களை பூஜையில், வைத்துக் கொள்ளலாமா?

பதில்: பூஜைகளுக்கு வைத்துக் கொள்ளக் கூடாது. கிருஷ்ணனுடன் பசுக்களோ, கோபிகளோ, இருந்தால் பாதகம் இல்லை.
(காமகோடி இதழ் பிப்ரவரி, 2000)

- இப்படிக் கூறி இருப்பவர் சாட்சாத் காஞ்சி மடத் தம்பிரான் ஜெயேந்திர சரஸ்வதியார்.

கடவுள் ஒருவர்தான் என்பார்கள்; அந்தக் கடவுள் பல ரூபங்களில் காட்சி அளிக்கிறார் என்பார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் என்பார்கள். ஏன் கோவில் என்று கேட்டால் - பக்தர்கள் வழிபடுவதற்கு ஓர் இடம் வேண்டாமா என்பார்கள். எங்கும் இருக்கிறார் என்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டால் சுரண்டுவதற்கென்று கோவிலை ஏற்படுத்த முடியாதே!

கடவுள் ஒருவர் இருக்கிறார் - அவர் எங்கள் மதம் கூறும் கடவுள் மட்டும்தான் என்பார்கள் மதவாதிகள்.

கடவுள் நம்பிக்கையாளர்களே இதன் காரணமாக மதச் சண்டை போட்டு மண்டை உடைந்ததுதான் மிச்சம்!

ஒரு மதத்துக்குள்ளும் கூட ஏகப்பட்ட பிரிவுகள் - சர்ச்சைகள் - சண்டைகள் - கோர்ட்டுப் படிக்கட்டு வரை ஏறிச் செல்கிறார்கள்.

கிருஷ்ணன் என்கிற கடவுள் உருவத்துக்குள்ளேயே குழப்பம்! புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணக் கடவுளைப் பூஜை அறையில் வைத்துக் கொள்ளக் கூடாதாம். அதற்குக் காரணம் என்ன - விளக்கவில்லை ஆச்சாரியாள். புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் ஒருக்கால் கீழ்ஜாதிக்காரன் என்கிற முத்திரையோ? பசுக்களோடு, கோபிகளோடு இருக்கும் கிருஷ்ணன் பாதகம் இல்லையாம். என்ன காரணம்? அதற்கும் விளக்கம் இல்லை.

கோபிகளோடு சல்லாபம் செய்யும் கிருஷ்ணன், கோபியரை நிர்வாணமாகப் பார்க்க ஆசைப்பட்ட கிருஷ்ணன் இவர்களுக்கு இனிக்கிறது.
புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணன் மட்டும் கசக்கிறது.

ஒரு கடவுளுக்குள்ளேயே இந்தப் பேதம் என்றால், மற்றவற்றில் கேட்கவா வேண்டும்? பேதம்தான் இவர்களின் வேதமோ?


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 8.2.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...