வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கடவுள்-இன்டர்நெட்!


வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலிருந்து கோவில்களும், கடவுள்களும் கூடத் தப்பிக்க முடியவில்லை.

ஆனாலும், ஒரு வேடிக்கை; எந்த ஒரு விஞ்ஞான கருவியும் கடவுளால் கண்டுபிடிக்கப்படவில்லை!

திருப்பதி ஏழுமலையான் தரிசனம், திருப்பதியில் தங்கும் வசதிகளுக்கு கிரடிட் கார்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! திருவரங்கம் பள்ளி கொண்ட ரெங்கநாதரின் கோவிலுக்கென்று தனி இணையம்  (INTERNET) வெப்-சைட் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது?

எங்கும் நிறைந்தவர் என்றும் எல்லாம் வல்லவர் என்றும் பக்தர்கள் மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கிக் கொண்டே கடவுள் பற்றியும், அவர் குடிகொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும், கோவில்கள் பற்றியும் சதா பிரச்சாரம் செய்துதான் தீரவேண்டியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் காட்டுகிறேன்! என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அந்த அளவுக்குப் பிரச்சாரத்துக்கு வலிமையுண்டு.

ஆண்டு முழுவதும் கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள், பண்டிகைகள், சடங்குகள், விரதங்கள் என்று பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு - ஒரு நொடி நேரம்கூட அந்தப் பிடிப்பிலிருந்தும், சிந்தனையிலிருந்தும் விடுபட முடியாத அளவுக்குக் கிடுக்கிப் பிடி போட்டு வைத்துள்ளனர் மக்களை! இவையெல்லாம் ஒரு பிரச்சார முறையே! தேவடியார்கள் முறை - ஆட்டபாட்டங்கள் - கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் - பாலியல் உணர்வுகளைத் தூண்டும் சிற்பங்கள் இன்னோரன்ன ஏற்பாடுகள் எல்லாம் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கவே!

இத்தகைய பிரச்சாரங்கள் இல்லாவிட்டால் கடவுளாவது, கோவிலாவது, மண்ணாங்கட்டியாவது அவற்றையெல்லாம் அறிந்த நிலையில்தான் இந்த ஏற்பாடுகள் எல்லாம்.

மதவாதிகள் வெகு கெட்டிக்காரத்தனமாக இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அறிவியல் சாதனங்களையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் சுரண்டும் கருவிகளான கோவில்களையும், அவர்களின் படைப்புக் கருவிகளான கடவுள்களையும் பொதுமக்களின் மண்டைக்குள் திணிக்கும் வேலையில் 24 மணிநேரமும் இயங்கும் தொழிற்சாலைப் பணிபோல் சதா ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

சங்கராச்சாரியார்களை அகோபில மட ஜீயர்களை ஒன்று கேட்கலாமா? கிரடிட் கார்டு சிஸ்டம், வெப்சைட் சிஸ்டமெல்லாம் எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சட்டம் போட்டால் அது ஆகமங்களுக்கு விரோதம் - கோவில் பணிகள் எல்லாம் ஆகம விதிகளுக்கு உட்பட்டவை என்று கூக்குரல் போடும் இந்தச் சிரோன்மணிகள் இதற்குப் பதில் சொல்லுவார்களா?


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 10.1.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...