நவம்பர்
22- தந்தை பெரியார் காஞ்சீபுரம் காங்கிரஸ் மாநாட்டை விட்டு (1925) வெளியேறிய வரலாற்றுப் புகழ் பூத்த புது திருப்ப நாள்! திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டுப் பந்தலுக்கு,
மாநாட்டுத் தலைவர் திரு.வி.க.
அவர்களுடன் தந்தை பெரியாரும்,
சர்க்கரைச் செட்டியாரும், ம.சிங்காரவேலுவும் குதிரைச் சாரட்டில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதெல்லாம் உண்மைதான்!
ஆனாலும், தந்தை பெரியார் அம்மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம்,
தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல,
இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் உள்ள உரிமைப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சமூக நீதிக்கான வித்து ஊன்றப்பட்ட நாள் - புத்தொளி பாய்ச்சப்பட்ட நாள்!
அத்தீர்மானமாவது:-
தேசிய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல ஜாதியாருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கையும்,
துவேஷமின்மையும் ஏற்பட வேண்டுமாகையால்,
ராஜ்ய சபைகளிலும், பொது ஸ்தாபனங்களிலும்,
பிராமணர்,
பிராமணரல்லாதார்,
தீண்டாதார் எனக் கருதப்படும் இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத் தொகை விழுக்காடு,
தங்கள் தங்கள் சமூகத்திலிருந்து,
பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது!
தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தைத்தான், ஒழுங்கு தவறானது என்று கூறி, மாநாட்டுத் தலைவர் திரு.வி.க.
தள்ளுபடி செய்தார்.
இதனைக் கண்டித்துத் தான் தந்தை பெரியார் வெளியேறினார்.
நேருக்கு நேர் திரு.வி.க.வைப் பார்த்து அம்மாநாட்டிலேயே தந்தை பெரியார் கூறினார்: நீங்கள் சீனிவாச அய்யங்கார்ப் பேச்சைக் கேட்டாலும் சரி, பிராமணர்கள் உங்களைத் தங்கப் பல்லக்கில் வைத்து வைரத்தால் கிரீடம் சாத்தி தூக்கிக் கொண்டு சுமந்தாலும் சரி எனக்கு அக்கறையில்லை.
உங்கள் யோக்கியதையை சபையோர் அறியவேண்டும் என்பதுதான் என் ஆசை. மற்றபடி இந்தக் கூட்டத்தில் தீர்மானமாகிவிட்டதால்தான் பிராமணரல்லாதாருக்கு நன்மை ஏற்படுமென்றாவது,
இல்லாவிட்டால் ஏற்படாதென்றாவது நான் பயப்படவில்லை என்று கூறி மாநாட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பலன்
- இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு மத்தியில்
50 விழுக்காடு என்பதை எண்ணிப் பார்ப்போம்! இந்தச் சரித்திரப் பொன்னாளை நன்றி உணர்வோடு நினைவு கூர்வோம்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
22.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக