பெண்களுக்காக எத்தனை எத்தனையோ சட்டங்கள் வந்துள்ளன. இன்னும் எத்தனையோ சட்டங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு வரவும் இருக்கின்றன.
இவை எல்லாம் காலத்தின் கட்டாயம்!
ஆனாலும் பெண்களைப் பற்றிய அடிப்படை சமுதாய சிந்தனை மாறியிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த மாற்றம் வந்தால்தான் சட்டங்களே கூட உயிரோட்டத்துடன் செயல்பட முடியும் - இல்லையென்றால் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்களே!
இன்றைக்குக்கூட சட்டமன்றங்களிலும்,
நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு என்கிறபோது கூடவே கூடாது; 10
விழுக்காடு போதும் என்கிற ஆணாதிக்கக் குரல்கள் செவிட்டுக் காதுகளிலும் விழுமாறு ஒலிக்கத்தான் செய்கின்றன!
ஏனிந்த நிலை?
ஆண்களின் மனோபாவத்தில் மாற்றமில்லை!
1941இல் ஆயிரம் ஆண்கள் இருந்தால் பெண்களின் எண்ணிக்கை 1010.
50 ஆண்டுகளுக்குப் பிறகு 1991இல் ஆண்கள் ஆயிரம் என்றால், பெண்களின் எண்ணிக்கை 948 ஆகக் குறைந்து போய்விட்டது. ஏனிந்த நிலை?
கருப்பையில் இருப்பது ஆணா - பெண்ணா என்பதை விஞ்ஞானம் கண்டு பிடித்துக் கொடுத்தது.
அந்த விஞ்ஞானம்கூட பெண்களுக்குக் கேடாகவா முடியவேண்டும்?
பெண் என்றால் கருவைக் கலைத்துவிடு
- இதுதான் சமுதாயப் போக்கு. ஏன்?
பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பது என்பது குடும்பத்துக்குச் சுமை! வரதட்சணை என்னும் திராவக நெருப்பு பெற்றோர்களைப் பொசுக்குகிறது!
இவளை வளர்த்து ஆளாக்கி, இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என்று பெற்றோர்கள் பெருமூச்சு விடும் நிலை! ஏனிந்த வம்பு? அந்த மூச்சையே கருவிலேயே அழித்துவிட்டால்... முகத்தைப் பார்த்தால் மனம்கூட மாறிவிடலாம்;
எனவே,
கருவிலேயே கருக்கி விடு என்கிற கொடுமை!
ஸ்கேன் செய்து பார்த்து ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கும் மருத்துவர் அதுபற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என்று சட்டம் கூறுகிறது! ஊமைச் சட்டம் பேசாது.
சூசகமாகச் சொல்லுகிறார்களாம்!
சிவசிவ என்றால் ஆணாம்! ஓம் சக்தி என்றால் பெண்ணாம்!
ஓம் சக்தியா
- கதையை முடித்துவிடு என்கிறார்கள்.
அந்த ஓம் சக்தியாவது வந்து காப்பாற்றக் கூடாதா?
(கட்டுரைக்கு ஆதாரம்:
குமுதம்,
11-11-1999)
- விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
23.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக