மனுதர்ம சாஸ்திரத்திற்கும் ராமாயணம் முதலிய ஆரிய புராண
இதிகாசங்களுக்கும் இன்று எவ்விதத்தில் பேதம் கற்பிக்க முடியும்?
இதைப்பற்றிய விவகாரத்தை மற்றொரு சமயம் வைத்துக் கொள்வோம். ஆனால், நாம் இந்தியா
பூராவும் ஒரு நாடு என்றும், நம்மை இந்தியன் என்றும் அதனால் இந்து சமயத்தவன் என்றும் சொல்லிக்
கொண்டும் பெரும் பரப்பில் இதுவரை இருந்து அரசியல் கிளர்ச்சியும், சமயக்
கிளர்ச்சியும் செய்து வந்ததில் என்ன பலனடைந்திருக்கிறோம்?
இன்று நம்முடைய எல்லா இந்திய அரசியல் தலைவர்கள் காந்தியாரும் -
ஜவஹர்லால் பண்டிதரும் - நம் மாகாணத்திற்குத் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தி
சாஸ்திரியாருமாய் இருக்கிறார்கள். ஆச்சாரியார் சாஸ்திரியார்கள் அரசியல் தலைமை
வகித்து இந்த 30 மாத காலத்தில் நமக்குச் செய்த காரியங்கள் என்ன என்பதை அனுபவத்தில்
பார்த்ததோடு அனுபவித்து வந்திருக்கிறோம்.
ஆச்சாரியார் நமக்கு இம்மாதிரி சுய நிர்ணய முயற்சி என்றென்றும்
வரமுடியாமல் இருக்கும்படிச் செய்ய,
நமது கலைகளையும் பாஷைகளையும் அடியோடு
ஒழிப்பதற்கு ஆரிய பாஷையைத் திராவிட மக்களுக்குள் குழந்தைப் பருவத்தில் கட்டாயமாகப்
புகுத்தினார். எதிர்த்தவர்களை ஆண்,
பெண் அடங்கலும் தமிழர்களின் ஸ்தாபனங்களின்
தலைவர்கள் உள்பட அடக்குமுறைச் சட்டத்தினால் பல வருஷக்கணக்காய்த் தண்டித்துப் பல
ஆயிரக்கணக்கான ரூபாய்களை அபராதம் போட்டுச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை
பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக