டார்பிடோ என்றால் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பலைத் தாக்கும் யுத்தக் கருவி என்று பலருக்கும் நினைவிற்கு வருவதைவிட தோழர்ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் நினைவுதான் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டு
மக்களுக்கும் வரும்.
அவர் பேச்சு அப்படி ஆணித்தரமானது;
எதிரி முகாம்களைப் பொடிப் பொடியாக்கக் கூடியது!
அந்தக் காலகட்டத்தில் எம்.ஏ., படித்து ஒருவர் இயக்கத்திற்கு வந்தார்; தந்தை பெரியார் எங்குச் சென்றாலும் பித்துப் பிடித்தவர்போல் அவர் பின்னால் அலைந்து திரிந்தார் என்று சொன்னால், அது சாதாரணமானதல்ல!
அவர் படித்த படிப்புக்குப் பெரிய உத்தியோகத்துக்குச் சென்று இருக்கலாம்;
கல்லூரிப் பேராசிரியர் ஆகி இருக்கலாம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் அவருக்கு அத்துப்படி!
திராவிடர் கழகத்தை விட்டு அரசியல் முகாமுக்குச் சென்ற காலகட்டத்திலும்கூட, அவர் பேச்சும் மூச்சும் பெரியார்! பெரியார்!! பெரியார்!!! தான்!
எம்.ஏ., படித்திருக்கிறோம் என்கிற படாடோபம் இருக்காது; காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல்லர் அல்லர்; அன்பையும் பாசத்தையும் கொட்டும் நட்பு வெல்லக்கட்டி!
தாம் ஏற்ற கொள்கைக்கேற்ப ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்! மனோரஞ்சிதம் அம்மையார் அவரின் உற்ற துணைவியார்!
கழகக் குடும்பத்தவர்கள் வீட்டில் பல நாள்கள் தங்கி அளவளாவுவார். கல்லூரி மாணவர்களின் விடுதிகளில் பல நாள் தங்கி, அம்மாணவர்களிடையே தந்தை பெரியார் பற்றியும், அவர்தம் கொள்கை, இயக்கம்பற்றியும் விரிவாக எடுத்துரைத்து,
இளைஞர்களை,
மாணவர்களை இயக்கத்தின் பால் ஈர்க்கும் இயல்பினர்!
அரசியல்வாதிகளுக்குரிய கல்யாணக் குணங்கள் அவரிடம் கிஞ்சிற்றும் இல்லாத காரணத்தால் அரசியலில் அவரால் பரிணமிக்க முடியவில்லை.
பணம் என்ற சொத்தை அவர் சேர்க்கவில்லைதான்!
ஆனாலும்,
கருஞ்சட்டைத் தோழர்களின் சுயமரியாதைக் குடும்பத் தோழர்களின் உள்ளத்தில் எல்லாம் தம் பாச முகத்தை வேரூன்றச் செய்த பெருஞ் சொத்துக்காரர் அவர்!
வாழ்க டார்பிடோ!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
1.4.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக