பின்னணிப் பாடகியான எஸ். ஜானகியைப் பிள்ளைகள் சந்தித்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தனர். ஓர் இடத்தில் அந்த பின்னணிப் பாடகி அம்மையார் சொன்னார்.
அம்சவர்த்தினி என்று ஒரு ராகம் இருக்கிறது. அதைப் பாடினால் கண்டிப்பாக மழை பொழியும். தாம் ஒருமுறை அந்த ராகத்தில் ஒரு பாட்டுப் பாடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது மழைத் துளிகள் விழுந்தன என்று கூறியதோடு மட்டுமல்ல; அந்த ராகத்தில் பாடியும் காட்டினார்.
கள்ளங்கபடமில்லாத அந்தச் சிறுவர் - சிறுமியர்களில் ஒருவர் பொறி தட்டியது போல ஒரு கேள்வியை மழலைக் குரலில் கேட்டார்.
சென்னையில் இப்பொழுதெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம்; மழையும் இல்லை. ஏன் நீங்கள் அந்த ராகத்தில் ஒரு பாட்டுப் பாடி மழையைப் பெய்விக்கக் கூடாது? என்று ஒரு கேள்வியை போட்டாரே பார்க்கலாம்!
பிள்ளைகளைச் சுதந்திரமாகச் சிந்திக்கவிட்டால் அவை மாணிக்க ஒளிதான்!
அந்தோ, பரிதாபம், பாடகி அம்மாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. அசடுதான் வழிந்தது. ஏதேதோ சொல்லி சமாளித்தார்!
குன்னக்குடி வைத்தியநாதய்யர்வாள் வயலினைத் தூக்கிக் கொண்டு போய் புழலேரியின் கரையில் உட்கார்ந்துகொண்டு அம்சவர்த்தினி ராகத்தை இழை இழை என்று இழைத்தார். மக்களைப் பக்தியின் பக்கம் புரட்டித் தள்ளி மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் இந்தப் பெரிய மனிதர்களுக்கு அப்படி என்னதான் வெறியோ?
விடுதலை, 25.8.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக