கலையை வெறும் கலையாக நோக்கவேண்டும்
- அதில் கருத்துக்கு இடமில்லை என்று கூறுபவர்களும் உண்டு. கலையில் முற்போக்குச் சிந்தனைகள் நுழைய ஆரம்பித்தவுடன்,ஆதிக்கக்காரர்களின் சிந்தனையில் குயுக்தியாக பிறந்த புதிய ஞானோதயம்தான் இது! அப்படி சொல்லக் கூடியவர்கள் வாழையடி வாழையாக கூத்துகளில், நாடகங்களில், திரைப்படங்களில்,
நாட்டியங்களில்,
கச்சேரிகளில்,
சிலைகளில் முழுக்க முழுக்க பக்தியையும் பார்ப்பன சமாச்சாரங்களையும் திணித்தவர்கள்
- புகுத்தியவர்கள்தாம் என்பதை மறந்துவிடக் கூடாது.
படங்களில் புதுப்புது படிப்பினைகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் என்னுள்ளே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகில் உள்ள மனித இனங்களைப்பற்றிய பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்ப்பதற்குத்தான் கலைத்துறையை உபயோகப்படுத்த வேண்டும் என்றார் கலைவாணர்.(ஆதாரம்: அன்புக்கொடி நல்ல தம்பி எழுதிய சிரிப்பில் மலர்ந்த சிந்தனை மலர்கள்)
இதன்மூலம் கலைவாணரின் உள்ளத்தில் ஆட்கொண்ட உணர்வு எது என்பது வெளிப்படை.
தன் வாழ்நாள் முழுவதும் அதே நோக்கத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்கள் மூளையில் பதிய வைக்கும் மாபெரும் பணியில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். கலைவாணர் மறைந்தாலும் அவரின் நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளையும்,
காட்சிகளையும் மக்கள் சமுத்திரம் இன்றைக்கும் பேசிக் கொண்டுதானிருக்கிறது. ஒரு மனிதனின் சாதனை என்பது இதுதான்!
1939-இல் மாணிக்கவாசகர் என்ற திரைப்படம் வெளிவந்தது.
அதில் ஒரு காட்சி! அப்படத்தில்,
அரண்மனை நிர்வாகியாக நடித்தார் கலைவாணர். ஆட்சி அதிகாரத்தில் புரோகிதர்களின் தலையீடு இருந்தது. அதுபற்றி கலைவாணர் அப்படத்தில் இதோ பார் இது என்ன தெரியுமா? பேனா.
தர்ப்பைப்புல் அல்ல. தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு என்று கூறுவார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடம் கூற, மிகவும் மகிழ்ச்சி அடைந்த அய்யா அவர்கள் கலைவாணரை நேரில் அழைத்து பாராட்டு மழை பொழிந்தார்.
கலைவாணரின் அந்தக் கலைத்துறைப் பாட்டையிலேயே இப்பொழுது பல இளைஞர்கள் பாதம் பதித்து வருகிறார்கள்.
அந்தப் பட்டியல் வளரவேண்டும்
- அதுவே கலைவாணருக்குச் செய்யும் உண்மையான நினைவுச் சின்னம்! வாழ்க கலைவாணர்!
விடுதலை, 30.8.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக