மருதமலை முருகனுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறதாம். ரொம்பவும் முக்கியமான வேலைதான். மக்களின் தேவைகள் எல்லாம் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்பட்டு,
இருக்கும் நிதி நிலையை என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுங்கும் நிலையில் ஏதாவது செய்யவேண்டுமே என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்களோ? 102 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உழலுபவர்கள் 40 கோடியாம். இந்த யோக்கியதையில் கோவணத்தோடு தண்டு கொண்டு நிற்கும் ஒரு மொட்டையாண்டி கடவுளுக்கு
(பொம்மைக்கு)
தங்கத்தினாலான தேர் கேட்கிறதாம்.
மக்கள்மீது பற்றும் அவர்கள் வாழ்க்கையின் மீது அக்கறையும் கொண்ட அரசோ, தலைவர்களோ,
மக்களோ வாழும் ஒரு நாட்டில் இது நடக்குமா - அனுமதிக்கப்படுமா? 23 கோடி மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் 11.10 கோடி பேர் குழந்தைத் தொழிலாளர்களாம். மூன்றரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கூலி வேலைக்குச் செல்லும் கொடுமை! இந்த லட்சணத்தில் குட்டிச் சுவர்களைக் கோவிலாக்கி குடமுழுக்கு நடத்த கோடி கோடியாகக் கொட்டி அழுவது நியாயந்தானா?
மனிதாபிமானம்தானா?
கடவுள்தான் எங்கும் நிறைந்தவர் - எல்லாம் வல்லவர்
- வேண்டுதல் வேண்டாமை இல்லாதவராயிற்றே!
அப்படித்தானே ஆன்மீகத் தலைவர்களும் பக்த கோடிகளும்,
உபந்நியாசிகளும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதைப் பார்த்துக்கொள்ளும் சக்திகூட கடவுளுக்குக் கிடையாது என்று பக்தர்கள் கருதுவார்களேயானால்,
அந்த எண்ணம்கூட நாத்திகம்தானே?
ஆடு, மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா என்பார்களே! அக்குதொக்கு இல்லாத கோவனாண்டியாகிய மருதமலை முருகனும் அப்படிதானே...
அவனுக்கு ஏன் தங்கத் தேர்?
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக