ஓமலூர் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாலும் கொலை, கொள்ளை போன்ற சம்பவம் நிகழ்வதாலும் ஓமலூர் போலீசார் காவல் நிலையத்தின் முன்பும், கோவில்களிலும் ஆடு வெட்டி காவு கொடுத்தனர்.
ஓமலூர் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விபத்து, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அடிக்கடி இந்த விபத்தும், திருட்டும் நடக்காமல் இருக்க ஓமலூர் போலீசார் பாப்பாரன் முனியப்பன் கோவிலிலும்,
காவல் நிலையத்தின் முன்பும் கடந்த இரண்டு மாதத்தில் 3 ஆடுகளும், ஒரு கோழியும் பலி கொடுத்து நேர்த்தி கடன் செய்து வருகின்றனர்.
21-ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் பல்வேறு மூடநம்பிக்கைகளை இன்னும் கடைபிடிப்பது அதிசயமாக உள்ளது. காவல் துறையினரே இவ்வாறு மூடநம்பிக்கை செயல்களில் ஈடுபடுவதை அப்பகுதி மக்களே பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
(தினமலர், 31-1-2000)
தினமலர் ஈரோடு பதிப்பில் வெளிவந்த மேற்கண்ட செய்தியை மாவட்ட திராவிடர் கழக மாணவரணி செயலாளர் மானமிகு சி. மதியழகன் நமக்கு அனுப்பியுள்ளார்.
காவல்துறை அலுவலக வளாகத்துக்குள்ளேயே (தலைநகரிலேயே) யாகம்! காவல்துறை அலுவலக வளாகத்துக்குள்ளேயே கோயில்கள், குடமுழுக்குகள்!! கொஞ்சங்கூடக் கூச்சநாச்சமின்றி சாங்கோபாங்கமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் ஆணைகள் மிகத் திட்டவட்டமாக இருந்தும், அவற்றையெல்லாம் மலந் துடைக்கும் காகிதங்களாக அதிகாரிகள் மதிக்கும் போக்குத் தொடர்வது -
இந்த ஆட்சியைப் பற்றி அவர்கள் மத்தியில் இருக்கும் மரியாதையைத்தான் வெளிப்படுத்தும்.
விபத்துகள், கொலைகள் நடந்தால் அவற்றை தடுக்கவோ, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவோ காக்கிச் சட்டைகள் இனித் தேவையில்லை.
காவல் நிலையங்களில் எல்லாம் அதிகாரப்பூர்வமாக ஒரு பூசாரியை நியமனம் செய்து ஆடு, கோழி வெட்டும் வேலையைச் செய்துகொண்டிருக்கலாம்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
04.02.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக