டாக்டர் சி.நடேசனார் என்கிற பெயர் திராவிடர் இயக்க வரலாற்றிலும், பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திலும் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு கம்பீரமான பெயர்! அவரின் நினைவு நாள் இன்று
(18-2-1937) 62-ஆம் அகவையிலேயே அவர் மறைவுற்றார் என்றாலும், அவர் ஆற்றிய அடிப்படைத் தொண்டு பல நூற்றாண்டுகள் பெறுமானமானது!
நீதிக்கட்சியின்
பிதாமகர்கள் என்று போற்றப்படுபவர்கள் டாக்டர் சி.நடேசனார்,
பி.தியாகராயர்,
டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோராவர்.
நீதிக்கட்சியின்
தோற்றுவாய்க்கு மூலவித்து டாக்டர் சி.நடேசனார். சென்னை - திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்தப் பெருமகனால்
1912இல் துவக்கப்பட்டதுதான் திராவிடர் சங்கம் என்பதாகும்.
அந்தக் காலத்தில் கல்லூரியில் படிக்க வேண்டுமானால் வந்துசேர வேண்டிய இடம் சென்னைதான்.
பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில்,
பார்ப்பனர் அல்லாதவர் எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடலாம்;
ஆனால்,
தங்கிச் சாப்பிட முடியாது! எவ்வளவுப் பெரிய கொடுமை! கொடுமை!!
அந்த நேரத்தில் டாக்டர் சி.நடேசனார் அவர்கள் திராவிடர் இல்லம் என்ற விடுதியைத் துவக்கினார்.
அந்தக் காலகட்டத்தில் பாலைவனத்தில் கிடைத்த சோலை அது என்பதில் அய்யமில்லை. பார்ப்பனர் அல்லாதார் இலவசமாகவே தங்கிப் படிக்க இந்த ஏற்பாடு என்பது அடடே, எவ்வளவுப் பெரிய மகத்தான செயல்! இந்த விடுதியில் தங்கிப் படித்த திரு. சுப்பிரமணிய நாடார் பிற்காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி; இந்த இல்லத்தில் தங்கிப் படித்த டி.எம்.நாராயணசாமி பிள்ளை பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்.
இதுபோன்ற ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
சென்னை மாநில சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முத்திரைகளைப் பொறித்தவர்.இன்றைய தலைமுறையினர் பெற்றிருக்கும் வாழ்வுக்கும், வளத்துக்கும் இந்தத் திராவிடர் இயக்க ஆணிவேர்கள் அன்றோ காரணம்!
வாழ்க பெரியார்!
வாழ்க நடேசனார்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
18.2.2002
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக