ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜாடையா?




வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மத வித்தியாசம் பார்க்கவில்லை அமெரிக்க அதிபர்.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்வாதிகள் கொண்டாடும்போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.
இப்படி வாயிலும், வயிற்லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கிறோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தினமலர் கூட்டத்துக்கு உண்டா?

ஜனவரி முதல் தேதி ஆங்கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

கிறித்துவ ஆண்டு பிறப்புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே  நினைவிருக்கிறதா?

இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்களுக்கும் செல்ல விரும்பினார். கேரளாவில் புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்புகிறோம் என்றும் அறிவித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்துவிட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னார்களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

ஒபாமா தீபாவளி கொண்டாட தயாராகிறார். இந்துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழையக்கூட தடை போடுகிறார்கள்.

இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?
ஒபாமாவின் ஜனநாயகத்தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்களுக்கு உண்டா?
முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்லவில்லையாம்  அதற்குத்தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர்! எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

28.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...