திருப்பதி கோயிலில் கட்டண சேவை உயருகிறதாம். இப்பொழுது ரூ.300 ஆக இருப்பது மேலும் உயர்த்தப்பட உள்ளதாம்.
உலகத்திலேயே இதுதான் பணக்காரக் கடவுள் என்கின்றனர். நகைகளின் மதிப்பு மட்டும் 55 ஆயிரம் கோடி ரூபாயாம்.
மூன்று கோடி ரூபாய் மதிப்புக்கு தங்கத்திலான அண்டா, குண்டாக்கள் எல்லாம் காணிக்கையாக வேறு!
கத்தைக் கத்தையாக உண்டியலில் (கறுப்பு) பணமழை இன்னொரு பக்கம்!
லட்டு விற்பனையில்கூட கொழுத்த வேட்டை! முடி காணிக்கையிலும் மூச்சுமுட்ட வருவாய் குவிப்பு.
திருப்பதியில் மூலக்கடவுள் இருப்பதோடு மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் கிளைக் கடைகள் (ஏழுமலையான் கோயில்கள்).
கோயில் அமைப்பு முறை என்பதே ஒரு வர்த்தக முறை (பிசினஸ்) ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதை நாம் சொன்னால் நாத்திகர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் என்று சுருக்கென்று லொள்ளு பேசுவார்கள்!
1976 மே திங்களில் காஞ்சிபுரத்தில் அகில இந்திய இந்து மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் அன்றைய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?
மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும் ஒரு ஃபேஷனாக
கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று கூறினாரே - அந்த வர்த்தக மனப்பான்மையை உருவாக்கிக் கொடுப்பதே கோயில்கள்தானே?
அதிக பணம் கொடுத்தால் சீக்கிரம் ஆண்டவனைத் தரிசிக்கலாம் என்பது வர்த்தகப் பாணி அல்லாமல் வேறு என்னவாம்?
கோயில்களில் தரிசனக் கட்டணம் வசூலிப்பது இந்து மதத்தை அழிக்கும் புற்றுநோய் போன்றது (தினமலர், 12.10.2009) என்று சொல்லியிருப்பவர் யார்? விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் திருவாளர் வேதாந்தம் அய்யங்கார்தான்!
இந்து மதத்தைத் தாக்கும் இந்தப் புற்றுநோய்க்கு ஒரு படுக்கையை இப்பொழுதே அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சொல்லி வைக்கலாமே!
29.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக