திங்கள், 17 ஜூலை, 2017

கமல்

தீபாவளியன்று ஒவ்வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன்றிய கலைஞானி கமலஹாசன் தீபாவளி பற்றியோ, தீபாவளி வாழ்த்து என்றோ ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் தன் தனித் தன்மையை நிலை நாட்டினார்.

ஒரு கேள்வி: கடவுள் நல்லவரா கெட்டவரா?

கமல் பதில்: நான் கடவுளையே பார்க்கவில்லையே. அப்படி இருக்கும் போது அவர் நல்லவரா, கெட்டவரா என்று எப்படி சொல்ல முடியும்?

என்று ஒருபோடு போட்டாரே பார்க்கலாம். பகுத்தறிவு உள்ள மனிதன் யாராக இருந்தாலும் இதனை ரசித்திருப்பான் - சுவைத்திருப்பான்.

இதற்கு முன்பு கூட பத்திரிகைப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய கருத்து ஒன்றினை விடுதலை (5-8-2008) வெளியிட்டதுண்டு.

என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது.

நான் ஆன்மிகத்தை வெறுக்கிறேன் - கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மிகம் நம்பிக்கையை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்து விடுகிறது.

ஆனால் நான் சாகும் வரையில் இயங்க விரும்புகிறேன். என்னையே கேள்வி கேட்டுஎன் வாழ்க்கை முறையைக் கவனித்து, காலத்திற்கேற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்து செயல்பட விரும்புகிறேன்எனது உடலை புதைக்கும் போதோ, எரிக்கும் போதோதான் நான் அமைதியாவேன் என்றார்.

ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் எழுச்சியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் இழக்கக்கூடாது என்ற கருத்தினை இதில் வலியுறுத்தியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்தச் சிந்தனை யோட்டம், அவரிடம் எப்படி குடிபுகுந்தது?

நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் அந்தக் கலைஞரே கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத் துண்டோடு பூஜையை முடிச்சிட்டுவீட்ல இருக்கிறவர்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவு பூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடிச்சி. (குமுதம் - 7-20-2009) என்றாரே.

எத்தனைக் காலமாக புரையோடிப் போன வேர்களை இந்த மனிதர் புரட்டிப் போட்டு இருக்கிறார். கமலஹாசன் போன்ற திறந்த மனத்தோடு அணுகும் எவரையும் தந்தை பெரியார் சிந்தனை புரட்டிப் போடும் தான்.

அய்யயோ, அந்தத் தாடிக்கார கிழவரின் பேச்சைக் கேட்க மாட்டேன்; வரிகளைப் படிக்க மாட்டேன்; அப்படிக் கேட்க நேர்ந்தால், படிக்க நேர்ந்தால் நான் திருந்தி விடுவேன், என்ன செய்வது? என்று கதறும் கோழைகளிடத்தில் பெரியாருக்கு என்ன வேலை? அவருக்கு வேறு வேலையில்லையா?

7.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...