ஞாயிறு, 16 ஜூலை, 2017

கே(கோ)டிகள்


திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ரூ.40 லட்சம் செலவில் வைர கிரீடம் ஒன்றை சென்னையைச் சேர்ந்த பக்த கோடி ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

மகாராட்டிரத்தில் சிர்டியில் வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள சிர்டி சாய் பாபாவுக்கு தங்கத்திலான சிம்மாசனம் செய்ய சாய்பாபா அறக்கட்டளை முடிவு எடுத்துள்ளது.

மக்களின் வாழ்க்கை அன்றாடம் எப்படியெல்லாம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்பதுபற்றிக் கவலை யில்லாத ஒரு கூட்டம் நாட்டில் இருக்கிறது.

இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைவால், 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டச்சத்துகள் குறைவின் காரணமாகத்தான் ஆண்டு ஒன்றுக்குப் பகுதிக்கு மேல் குழந்தைகள் மரணக் குழியில் விழுகின்றனர். பள்ளிப் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர்கள் 40 சதவிகிதமாம்!
மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்க்கு இரவில் உணவு கிடையாது. வறுமைக்கோட்டுக்கும் கீழ் உழலும் மக்கள் 26 கோடி; இதில் கிராமங்களில் மட்டும் 19 கோடி!

இந்த அவலம் மக்களைப் பிய்த்துத் தின்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிர்டி சாய்பாபாவுக்குத் தங்கத்தில் சிம்மாசனமாம்; திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வைரக் கிரீடமாம்! திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு நிரந்தர வைப்பு நிதி ரூ.1,835 கோடியாம்!

கல்லில், செம்பில் செதுக்கப்பட்ட அஃறிணைப் பொருள்களால் ஆனவற்றுக்கு (கடவுள்களுக்கு) இத்தனை இத்தனைக் கோடி!

உயிருள்ள மனிதர்களும், குழந்தைகளுமோ வறுமையின் கடைக்கோடியில் கிடக்கிறார்கள்.
நாடா இது?

பக்தி புத்தியை மட்டும் அழிக்கவில்லை; மனித இரக்க உணர்வையும் அல்லவா சாகடித்துவிட்டது!
``கடவுளை மறமனிதனை நினை என்ற தந்தை பெரியார் கூற்றையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

28.8.2006 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...