தமிழ்நாட்டில் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க கோயில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட உள்ளது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் திலகவதி தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமல்லாமல் மாவட்டம் தோறும் வேலை, வாய்ப்பகம் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்றும் மேலும் ஒரு தகவலைத் தெரிவித்தார்.
சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்று நீட்டி முழங்குகிறார்கள். ஒவ்வொரு ஊர் கோயில் பற்றியும், அதன் வீர,
தீரப் பிரதாபங்கள் குறித்தும் தலப்புராணங்களை எழுதியும் வைத்துள்ளனர்.
சில கோயில்களில் சாமி சிலைகளின் கைகளில் சூலாயுதம், வேலாயுதம், எல்லாம் கூட இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன.
சிவபுரம் நடராசன் சிலை கடத்தப்பட்டு அமெரிக்காவின் தொழிலதிபர் நாட்ரன்துரை வீட்டில் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டது. வரவேற்பு அறையில் இப்படி வேடிக்கையான, பொம்மைகள் எல்லாம் வைக்கப்படுவதுண்டு. அதுவும் காலைத் தூக்கி ஒரு பொம்மை ஆடுகிறது என்றால் விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்கும் அல்லவா! இதெல்லாம் மேல்நாடுகளில் ரசிக்கத்தக்க பொழுதுபோக்காகும்.
அந்த நடராசன் சிலையில் கையில் ஒரு சிறிய தட்டைக் கொடுத்து சிகரேட் தூளை தூவிடப்
பயன்படுத்தப் பட்டதாகக்கூட செய்திகள் வெளிவந்தன.
இவற்றையெல்லாம் அறிந்த பிறகு கடவுளுக்குச் சக்தி உண்டு, சிலைகள்தான் என்றாலும் மந்திரங்களால் அதில் சக்தி ஊட்டப்பட்டு இருக்கிறது என்று வியாக்கியானம் செய்யும் வேதியக்குலத்தோர்கள், ஆஸ்திக சிகாமணியினர், இந்து மகா சமுத்திரம் எழுதும் சோ கூட்டத்தினர்,
என்ன சொல்லப் போகிறார்கள்?
கடவுள் சிலைகள் கடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படை ஏற்படுத்துவதெல்லாம், அசல் நாஸ்திகச் செயல்; கடவுளைக் கேவலப்படுத்தும் போக்கு என்று உச்சநீதிமன்றம் செல்லப் போகிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தில் ராமனைக் காப்பாற்ற உச்சநீதிமன்றம் செல்லவில்லையா!
ராமன் ஏவிய அம்பு ஏழு கடலைத் துளைத்துச் சென்றது என்றெல்லாம் கதை
அளந்தவர்கள் ராமனைக் காப்பாற்ற உச்சநீதிமன்றத்தில் தவம் இருக்கத்தானே நேர்ந்தது.
ஒன்று மட்டும் உண்மை
யார் எங்கு சுற்றினாலும் கடைசியில் வந்து சேர வேண்டிய இடம் ஈரோட்டுச் சந்திப்புதான்.
கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.
கடவுளைக் காப்பாற்ற மனிதர்களைத்தானே தேட வேண்டியதாகி விட்டது. அதுதான் தந்தை பெரியார் சொன்ன கடவுளைமற மனிதனை நினை என்பது!
2.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக