கலைவாணர் என்று அன்பும், பாசமும், அறிவும் பொங்க மதிக்கப் பெற்ற கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (30.8.1957).
49 ஆண்டுகளே அவர் வாழ்ந்தார் என்றாலும், தமிழர்களின் நெஞ்சில் காலகாலத்திற்கும் குடிகொள்ளும் மாந்தர் அவர் ஆவார்.
மக்கள் மத்தியில் ஆழமாக வேர்ப் பிடித்திருந்த மூட நம்பிக்கை
பிற்போக்கு எண்ணங்களை, பழக்கங்களை சிரித்துச் சிந்திக்க வைப்பது என்ற பகுத்தறிவு அணுகுமுறையால் சிதற அடித்தவர்.
அவரின் ஆசான், பச்சை அட்டைக் குடிஅரசும் தந்தை பெரியாருமே ஆவார்.
ஒவ்வொரு திரைப்படத்திலும் மக்கள் நெஞ்சில் பதிய வைக்கும் காட்சிகளை அமைக்கத் தவறமாட்டார். அவருக்குப் பொருத்தமாகப் பாடல்களைத் தீட்ட உடுமலை நாராயணகவியும் கிடைத்தார்.
பணம் என்னும் திரைப்படத்திலே ஒரு பாடல்,
தீனாமூனா கானா எங்கள்
மீனா மூனா கானா
அறிவினைப் பெருக்கிடும்
உறவினை வளர்த்திடும்
திருக்குறள் முன்னணிக் கழகம்
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ
திருக்குறள் தந்தார் பெரியார்
வள்ளுவப் பெரியார்
என்ற பாடலைப் பாடுவார் கலைவாணர்.
தி.மு.க.,வையும், தந்தை பெரியாரையும் எவ்வளவு நயமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் கவனிக்கவேண்டும். (அபொழுது இருந்த தணிக்கைக்குழு அப்படி).
1947 ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரை சென்னை
வானொலி நிலையம் அழைத்திருந்தது.
நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே.
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கிவிட்டனர். (எல்லாம் அவாள் ஆயிற்றே!).
கலைவாணருக்கோ வந்ததே சினம்! பெரியார் பெயர் இடம்பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.
அந்தக் கொள்கை மாமணியை இந்நாளில் (30.8.2007)
நினைவு கொள்வோம்!
30.08.2007(விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக