படிப்பு வளர்கிறது; பணமும் வளர்கிறது; வசதிகளும் வளர்கின்றன அதேநேரத்தில் நோய்களும் வளர்கின்றன.
பெரியவர்கள் நோயின் பிடியில் சிக்குவது ஒன்றும் அதிசயமல்ல; மழலைகளுக்கு வருகிறது - அதுவும் அதிர்ச்சி யூட்டும் வகையில் மழலைப் பருவத்திலேயே நீரிழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் என்றால், கேட்கும்போதே ரத்தக் கொதிப்பு வருகிறதே என் செய்ய!
டில்லியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு ரத்தக் கொதிப்பாம்! காரணம் என்னவாம்! அன்றாடம் தின்னும் தின்பண்டமாம்.
எத்தகையவை அவை?
பிட்சா, பர்கர் என்ற பெயர் தாங்கிய நவீன தின்பண்டங் கள் பளபளப்பான காகித பைகளுக்குள்ளிருந்து கண் சிமிட்டி அழைக்கும் நவீன `மாடல் அழகிகள்!
பையில் கனமான பணம் உள்ளவர்கள் தம் பிள்ளை களுக்கு இந்தப் பொருள்களை வாங்கிக் கொடுத்தால்தான் அவர்களுக்குக் கவுரவம்; அவற்றை வாங்கிச் சுவைக்கும் அந்தப் பிள்ளைகளும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்கிற சமூக அங்கீகாரம் கிடைக்கும்.
குழந்தைகளாயிற்றே!
சபலம் பக்கத்துப் பிள்ளைக்கும் ஒட்டுவாரொட்டியாக ஆகிவிடுகிறது. நடுத்தரக் குடும்பங்களும் இந்தப் போலித்தனத்துக்குப் பலியாகின்றன.
விளைவு ஒன்பது வயதில் ரத்தக் கொதிப்பு! பொட்டுக் கடலையில் இல்லாத சத்தா - இந்த சிமிட்டும் ஜிகினா பைக்குள் இருக்கும் சரக்கு? கடலை மிட்டாயில் இல்லாத சுவையா இந்த
`சிப்சுகளுக்கு?
நியாயமாக மக்கள் நல் வாழ்வுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தத் தின்பண்டங்கள்மீது கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தின்பண்டங்கள் வெகு நாள்களுக்குக் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்கள், நிறம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நிறமிகள், கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சேர்ந்து சேர்ந்து கூட்டணி வைத்து யுத்தம் தொடுக்க ஆரம்பித்துவிடுமே! இந்த முற்பகலின் கேடு பிற்பகலில் தெரிந்துவிடுகிறது.
மழலைகளுக்கு என்ன தெரியும்? பெற்றோர்களுக் குத்தானே பொறுப்பு அதிகம்.
பணம் கொழுத்தால் அதற்குப் பால் மணம் மாறாப் பிள்ளைகளா கிடைத்தார்கள்?
இன்னொரு பக்கம் இன் னும் ஒரு புள்ளி விவரம்:
போதிய சத்து இல்லாமல் பரிதவிக்கும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் 79 சதவிகிதமாம்!
எப்படியாக இருந்தாலும் குழந்தைகள் பலியாகக் கூடாது! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!
4.9.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக