ஞாயிறு, 16 ஜூலை, 2017

ல(லா)ஹரி


மந்திரம்... இது மந்திரம்!

விசாவையும் எளிதாகப் பெற்றிட வைக்கும் அற்புத ஸ்லோகம், சௌந்தர்ய லஹரியில் வரும் 27 ஆவது ஸ்தோத்திரம், மனமுருகி சொல்வோருக்கு வெளிநாட்டுப் பயண யோகம் எளிதில் கிட்டும்.

ஜபோ ஜல்ப: சில்பம் ஸ்கலமபி
முத்ர விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண
மசனாத்யாஹுதி விதி:!
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில
மாத்மார்ப்பண த்ருசா
ஸ்பர்யா பர்யாயஸ்தவ பவது
யந்மே விலஸிதம்...!! சௌந்தர்ய லஹரி (27)

குங்குமம் இதழில் (7.6.2007) இவ்வாறு வெளிவந்துள்ளது. இதனைப் படிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் எழாமல் போகாது. விசா என்கிற விசயமெல்லாம் எப்பொழுது வந்தது? சௌந்தர்ய லஹரி எப்பொழுது வந்தது என்கிற சந்தேகம்தான்  அது.

விசா பெறுவதற்கென்று அரசு சில விதிமுறைகளை வைத்துள்ளது. அவை ஒழுங்காக இருக்கும் பட்சத்தில் விசா கிடைப்பதில் ஒன்றும் சிக்கல் இருக்காது. சில நாடுகளுக்கு எளிதில் கிடைக்கும்; சில நாடுகளுக்குக் கிடைக்காது; அது ஒவ்வொரு நாடும் அவ்வப்பொழுது எடுக்கும் கொள்கை முடிவைப் பொறுத்ததாகும்.

சௌந்தர்ய லஹரியில் 27 ஆம் ஸ்தோத்திரத்தை மனம் உருகிப் பாடினால் வெளிநாட்டுப் பயண யோகம் கிடைக்கும்  விசா கிடைக்கும் என்று கதைக்கிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

மக்களின் தேவைகள் அவ்வப்பொழுது புதிது புதிதாகத் தோன்றுகின்றன. கால தேச வர்த்தமானத்தில் வாழ்க்கையின் போக்குகளிலும் மாறுதல்கள் வருகின்றன.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பக்தியைப் பரப்பிட இவர்கள் முன்வருகிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இங்குதான் சௌந்தர்ய லஹரி இருக்கிறது; மற்ற மற்ற நாடுகளில் எல்லாம் இந்த ()ஹரிகள் கிடையாதே  அங்குள்ளவர்கள் எல்லாம் விசாவுக்காக என்ன செய்கிறார்கள்? அல்லது என்ன செய்யவேண்டும் என்று இந்து மதப் பக்தி வியாபாரிகள் சொல்ல விரும்புகிறார்கள்? அதனையும் கொஞ்சம் சொன்னால் அவர்களுக்குக் கோடி புண்ணியமாக(?) இருக்குமே  சொல்லுவார்களா?

அளவுக்கு மீறி ஆசையும், குறுக்கு வழியில் இலாபங்களும் கிடைக்கவேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் குள்ள மனம் உள்ளவர்களை வலைவீசிப் பிடிக்கும் தொழில் ரகசியம் இது!

ஆனால், உயர்ந்த உள்ளங்களுக்குச் சொந்தக்காரர்கள் இவற்றை விரும்பார்  காரணம், அவர்கள் உள்ளுவனவற்றுள் உயர்வையே உள்ளும் ஒழுக்கச் சீலர்கள்  பகுத்தறிவாளர்கள்!

பக்திப் பாதை எதைக் காட்டுகிறது? குள்ள மனிதர்களை குஷிப்படுத்தும் குறுக்குப் பாதையைத்தான் காட்டுகிறது.

இப்பொழுதாவது தெரிந்துகொள்ளட்டும்  பகுத்தறிவுக்கும், பக்திக்கம் உள்ள தார தம்மியத்தை!

06.08.2007(விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...