அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதேநேரத்தில் புதுடில்லியில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது; மனிதா பிமானத்தின் அடிப்படையிலும், மனித உரிமை அடிப் படையிலும் மேற்கொள்ளப்பட்ட அந்தச் சரியான, தேவையான போராட்டத்தை வழக்கம்போல ஊடகங்கள் பெரும்பாலும் இருட்டடித்து விட்டன.
போபால் யூனியன் கார்பைடு நச்சுவாயுக் கசிவினால் 22 ஆயிரம் பேர்கள் பிணமாயினர்; 5,74,367 பேர்கள் உடல் ஊனமுற்றார்கள். கண்மூடி கண் திறப்பதற்குள் விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள் இந்தப் பரிதாபத்தின் எல்லையைத் தொட்டன (1984).
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக, சரியான வகையில் நட்ட ஈடு கூடக் கொடுக்கப்படவில்லை என்பது கொடுமையின் உச்சமாகும்.
சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதால், அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, அவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் போபால் உயர்மறை மாவட்டப் பேராயர்லியோ தலைமையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆனாலும், இது குறித்து அமெரிக்க அதிபர் எந்த ஒரு வார்த்தையையும் உதிர்க்கவில்லை; அனுதாபத்தையும்கூடத் தெரிவிக்க வில்லை.
கடந்த 25 ஆண்டுகாலமாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். நாடாளுமன்றம் வரை கூடச் சென்று நியாயமான தங்கள் கோரிக்கைகளை வெளிப் படுத்தினார்கள்.
ஆலையின் நிருவாகியைப் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததில் அரசு அக்கறை எடுத்துக் கொண்டதே தவிர, பாதிக்கப்பட்ட மக்கள்பால் பரிதாப உணர்ச்சியைக்கூடக் காட்டவில்லை.
இதில் ஒரு கொடுமையின் சிகரம் என்ன என்றால், நீதிமன்றத்தில் அந்த ஆலையின் சார்பில் வாதாடிய வழக் குரைஞர் சொன்னதுதான்!
‘‘It was an act of god for which no human being was responsible’’
இது கடவுளின் செயல்; இதற்காக எந்த மனிதனையும் பொறுப்பாக்க முடியாது -என்று லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குக் காரணமான ஒரு நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சொல்கிறார் என்றால், இந்தக் கடவுளும், மதமும் மனித குலத்துக்கு எவ்வளவுப் பெரிய நாசகாரமான மூடுதிரைகள் என்பதை எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ!
இரவு நிம்மதியாகத் தூங்கச் சென்றவர்கள் காலையில் படுக்கைகளில் பிணமாகக் கிடந்ததும், பல லட்சம் பேர்கள் ஊனமுற்றதும் கடவுள் செயல் என்றால், அந்தக் கடவுள் என்ற கொடியவனுக்கும், அவன் முதுகுப்புறத்தில் ஒளியும் இந்த மனித மிருகங்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் - பக்தி சிரத்தையுள்ள மனிதர்கள்கூட சிந்தித்துச் சொல்லட்டுமே!
30.11. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக