ஓசூர் வழிகாட்டும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி அங்கு பெருமையுடன் நடந்திருக்கிறது. பெரியார் திரைப்படம் எந்தெந்த வகைகளில் எல்லாம் புதுப்புது சாதனை அத்தியாயங்களைப் பிரசவிக்குமோ தெரியவில்லை.
மே முதல் நாள் திரையிடப்பட்ட பெரியார் படம் இன்றோடு 36 நாள்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது மக்கள் மரியாதை கலந்த உணர்வோடு பெரியார் திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இந்து, ஆனந்தவிகடன் விமர்சனங்களுக்குப் பிறகு பார்ப்பனர்கள் கூட குடும்பம் குடும்பமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தந்தை பெரியாரின் பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டும் படமல்லவா மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது!
பல ஊர்களில் போட்டி; எங்கள் ஊரில் நூறு நாள் நிச்சயம் என்கிற தோரணையில் பல ஊர்களிலும் போட்டி உணர்வுகள் ஏற்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஓசூர் நகர மன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறார்கள் என்ற தகவலை புழல் ஏழுமலை தெரிவித்துள்ளார். பெரியார் திரைப்படத்தை ஒவ்வொரு குடும்பத்தவரும் சென்று பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளை தீர்மானமாகவே ஒருமனதாக நிறைவேற்றி இருக்கின்றனர் என்றால், இந்தப் பெருமை தந்தை பெரியாருக்கல்லாமல், பெரியார் படத்திற்கல்லாமல் வேறு யாருக்குக் கிடைத்திருக்க முடியுமா?
ஒரு திரைப்படத்துக்கும், பொதுமக்கள் மத்தியில், பொது அமைப்புகளின் மத்தியில், தொண்டு நிறுவனங்களின் மத்தியில், நிறுவனங்களை நடத்தும் பெருமக்கள் மத்தியில் இத்தகு வரவேற்பும், மரியாதையும் கிடைத்திருப்பது என்பது சாதாரணமானதல்ல!
திருப்பூரில் அய்யப்ப சேவா சங்கம் என்ற அமைப்பை நடத்திவரும் அய்யப்பப் பக்தர்கள் ஒரு பெருங்கூட்டத்தோடு சென்று பெரியார் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர் என்ற தகவலை திருப்பூர் தோழர் ஆ.பாண்டியன் தெரிவிக்கிறார்.
தந்தை பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்! இந்த மண்ணில் மலர்ந்த சகல மறுமலர்ச்சிக்கும் காரணம் அவர் தூவிய வீரிய வித்துகள்தானே?
அந்த நன்றி உணர்ச்சி
கொள்கைகளால் மாறுபட்டவர்களின் மனங்களையும் தந்தை பெரியார் என்ற மாமனிதரை நோக்கி நெகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீர் மல்கி நன்றிக்கரம் குவிக்கச் செய்திருக்கிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்?
தமிழக அரசிலிருந்து நகராட்சிவரை பெரியார் படத்தை எப்படி பார்க்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இதுவரை பெரியார் திரைப்படத்தைப் பார்க்கத் தவறிய தமிழினக் குடும்பங்களே, மேலும் தாமதிப்பு என்கிற குற்றத்தைச் செய்யாமல், இன்றே குடும்பத்துடன், (குழந்தைக் குட்டிகளுடன்) உற்றார் உறவினர்களுடன் சென்று பார்ப்பீர்களா? பெரியார் வெறும் படமல்ல; நம் மான வாழ்வுக்கான பகுத்தறிவுப் பாடம் நறுமணம் வீசும் ஒரு வாழ்க்கை நெறிமுறை!
05.06.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக