திருச்சி கண்டோன்மென்ட் லாரன்ஸ் சாலையில் ஒரு கோயில் அது அய்யப்பன் கோயில். என்ன ஆச்சரியம், கோயிலின் முகப்பு வாயிலில் ஒரு வாசகம்; அனைவரின் கவனத்தையும் கவர்கிறது; புருவத்தை மேலும் கீழும் ஏறி இறங்கச் செய்கிறது.
எந்த நாட்டினரும், எந்த மதத்தினரும், எந்த ஜாதியினரும், எந்த இனத்தினரும் வந்து தரிசிக்கலாம் என்பதுதான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வரிகள்.
குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்குள் மத்திய அமைச்சர் வயலார் ரவி குடும்பத்தினர் சென்றுவிட்டனர்; வயலார் ரவியின் மருமகள் ஒரு கிறிஸ்தவர் இந்துக் கோயிலில் அவர்கள் நுழைந்ததன்மூலம் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது; தோஷம் கழிக்கவேண்டும் என்று கூறி, இரண்டு நாள்கள் கோயிலை இழுத்து மூடி யாகங்கள் நடத்தி களேபரம் செய்கின்றனர் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் அதே இந்து மதத்தைச் சேர்ந்த அய்யப்பன் கோயிலுக்குள் எந்த மதத்தவரும் உள்ளே வரலாம் என்று விளம்பரப் பலகையே வைத்துள்ளனர்.
இது என்ன குழப்பம்?
ஒரே மதம் ஏன் இந்த இரட்டை நிலை இரட்டை அணுகுமுறை?
நியாயமான கேள்வி இதற்குப் பதில் சொல்ல இந்து மதத்தில் யார் இருக்கிறார்கள்? கேட்டுத் தெரிந்துகொள்ள இந்து மதத்தில் உள்ள அதிகாரபூர்வ ஆசாமிகள் யார்?
இந்து மதத்தைப் பொருத்தவரை தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். அவனவனுக்கும் அவனவனுக்குத் தோன்றிய விதத்தில் உளறிக் கொட்டலாம். அதனை ஏன் என்று கேட்கவோ, தடுக்கவோ யாரும் கிடையாது.
சங்கராச்சாரியார்கள் இல்லையா என்று கேட்கலாம்; அந்தச் சங்கராச்சாரியார்களுக்குள்ளேயே யார் பெரியவர் என்கிற குத்து வெட்டு.
இராமேசுவரம் கும்பாபிசேகத்தில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் லடாய்! அதைத் தீர்த்து வைக்க ஒரு மதுரை மடாதிபதி தேவைப்படுகிறார்.
அப்படியே சங்கராச்சாரியார் சொன்னாலும், அதனை ஜீயர் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஜீயர்களிலும் வடகலை, தென்கலை குழாயடிச் சண்டைகள்.
இந்த லட்சணத்தில் இந்த நாட்டில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறார்களாம்!
பைத்தியம் தெளிந்துவிட்டது; உலக்கையைக் கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்கிறேன் என்றானாம் ஒருவன் அதுதான் இந்த இந்து மதமோ!
28.05.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக