ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஷெகாவத்


பாரதீய ஜனதா கட்சி அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இன்றைய துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் முன் நிறுத்தப்பட்டுள்ளார். தந்திரமாக சுயேச்சையாக நிறுத்தப்படப் போகிறாராம். அது எப்படியோ போகட்டும்!
அவர் செய்திருக்கிற ஒரு காரியம், ஏடுகளில் வெளிவந்துள்ளது (தினமணி 23.6.2007 பக்கம் 12)

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள தேவதாஸ் கிராமத்திற்குச் சென்றுள்ளார். எதற்காக? ஏழை மக்கள் பிரச்சினையா? விவசாயிகளுக்கு ஏதாவது இடர்ப்பாடா  அவர்களின் கண்ணீரைத் துடைக்கப் போயிருப்பாரோ என்று சந்தேகிக்காதீர்கள்  அவர் சென்றது அங்குள்ள சனீஸ்வரன் கோவிலுக்கு. திருநள்ளாறில்தான் சனீஸ்வர பகவான் இருக்கவேண்டுமா? வெளிமாநிலத்தில் இருக்கக் கூடாதா? இருந்துவிட்டுப் போகட்டும்.

சனீஸ்வரன் கோவிலுக்குப் போவது அவரின் தனி உரிமை  அதுகூட இருந்து தொலையட்டும். எப்படி சென்றாராம்? இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று, சுமார் ஒரு மணிநேரம் சனி பகவான் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டாராம்.

அவர் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர். அந்த நிலையில் அவர் பக்திமானாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பொதுமக்களின் நெஞ்சை நெருடக் கூடிய கேள்வி ஒன்று  இருக்கிறது. இவர் தனிப்பட்ட உணர்வில் ஒரு கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்காக இந்திய இராணுவ விமானத்தையும், ஹெலிகாப்டரையும் பயன்படுத்தியிருக்கிறாரே  இது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்? அது ஒன்றும் அரசு முறை பயணம் அல்லமக்கள் பிரச்சினைக்காகவும் அவர் அங்கு செல்லவில்லை.

தனிப்பட்ட மத நம்பிக்கைக்காக இராணுவ விமானத்தையும், ஹெலிகாப்டரையும் பயன்படுத்தலாமா? அதற்காகச் செலவழிக்கப்படும் பணத்தை யார் கணக்கில் எழுதுவது? அரசாங்கக் கணக்கில் எழுதினால், அது மக்கள் பணம்தானே? இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் என்கிற அளவுக்கு மிகப்பெரிய பதவியில் உள்ள ஒருவர் இப்படி அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யலாமா? இதைப்பற்றி யாரும் கண்டிக்காதது ஏன்?

மற்ற மற்ற காரியங்களுக்கெல்லாம் பேனாவைக் கோடரியாக்கி வெட்டிப் பிளக்கிற பார்ப்பன ஏடுகள், இதழ்கள், விமர்சகர்கள் இந்தப் பிரச்சினையில் மட்டும் வாய் மூடிக் கிடப்பது ஏன்?

தன் சொந்தக்காரியங்களுக்கு அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடிய ஒருவரைத்தான் பா...வும், அதன் பரிவாரங்களும் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்!

24.06.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...