நெற்றியில் குங்குமம்!காலாவதியான மருந்துகளை விற்று பணம் குவித்த கும்பலைச் சேர்ந்தவர்களைக் கவனித்தீர்களா? அவர்களின் நெற்றிகளையெல்லாம் பாருங்கள், பட்டையும், குங்குமமும் அப்படியே ஜொலிக்கிறது. அப்படியே பக்திப் பழமாகக் காட்சியளிக்கின்றனர்.
அவர்கள் செய்த காரியமோ மக்களின் உயிர்களோடு விளையாடும் விபரீதச் செயல்!
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பக்தி செலுத்துபவர்கள் தனி ஒழுக்கத்தைப் பற்றியோ, பொது ஒழுக்கத்தைப் பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நம்பும் மதமும், கடவுளும், வழிபாடும், சாஸ்திர சம்பிரதாயங்களும் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பவை அல்லவே!
கடவுளைக் கும்பிட்டால் நினைத்தது நடக்கும் என்பதுதானே! அவர்கள் நினைத்தது என்ன என்பதுதான் முக்கியமானதாகும்.
நினைப்பது குறுக்கு வழியிலே கோடீஸ்வரனாவது எப்படி? கோடி சம்பாதித்தால் அவன் ஈஸ்வரனாகவும் ஆகி விடுகிறானே! (கோடி+ஈஸ்வரன்).
பக்தி என்பதே உழைப்பு இல்லாமல் தகுதிக்கு மேல் ஆசைப்-படும் உணர்வுதானே!
தவறான வழியிலே பொருளைக் கொள்ளை யடித்தாலும்
அந்தப் பாவங்களிலிருந்து சுலபமாக வெளியேற எளிமையான பிராயச்சித் தங்களையும் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்களே!
விஷ ஊசி போட்டுக் கொன்று கொள்ளை அடித்த பணத்தில் ஒரு சிறு தொகையை திருப்பதி உண்டியலில் போடவில்-லையா?
நம் நாட்டுக் கோயில்களில் தலப் புராணங்கள் என்ன சொல்லுகின்றன? எவ்வளவுக்கெவ்வளவு மோசமான, கொடிய பாவங்களையும் போக்க எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த அளவு பரிகாரம் என்பதில்தானே கோயில்களுக்குள் போட்டா போட்டி?
அதாவது குறைந்த முதலீடு கொள்ளை லாபம்!
தந்தையைக் கொன்று தாயைப்
புணர்ந்தவனுக்கே பாவப் பரிகாரம் ஒரு குளத்தில் குளிப்பது தானே! இதற்கு மேல் எந்த எழவை இந்து மதத்திலிருந்து எடுத்துச் சொல்வது?
பக்தி வேடம் போடும் ஆண்களிடம் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மக்கள் கலையரசி மனோரமா சொன்னதாக நினைவு!.
4.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக