நாகாலாந்தைச் சேர்ந்த ஜபுடுயோ அங்கசாமி (வயது 87) என்ற அன்னை. இவருக்கு ஒரே ஒரு குழந்தை. இக்குழந்தைக்கு வயது 10 ஆன நிலையில், இராணுவத்தில் பணியாற்றிய இவ்வம்மையாரின் கணவர் மரணம் அடைந்தார்.
இவரது பக்கத்து வீட்டில் ஒரு நிகழ்வு; குழந்தை பெற்ற தாய் மரணம் அடைந்தார். அந்தக் குழந்தையையும் அரவணைத்துத் தம் வீட்டுக்குக் கொண்டு வந்து தம் குழந்தையோடு சேர்த்தே வளர்த்தார் (எத்தகு பெருவுள்ளம்!).
அதோடு அவர் ஓய்ந்து விடவில்லை. எங்கெங்கெல்லாம் அனாதையாக விடப்பட்டார்களோ அந்தக் குழந்தைகளையெல்லாம் தேடிச் சென்று மார்போடு அணைத்து, அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் தன்வாழ்வு என்ற கடல் போன்ற கருணையுள்ளம் அந்தத் தாய்க்கு.
இந்த வகையில் 683 குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்குக் கல்விப்பால் புகட்டி, நல்ல வேலை வாய்ப்புக் கிட்டும்வரை இந்தத் தாயின் கரங்கள்தான் அந்தப் பிள்ளைகளின் அன்புத் தொட்டில்கள்!
87 வயதான இந்த நிலையிலும்கூட இந்த அன்னையின் இல்லத்தில் வட இந்தியா நாகாலாந்து மற்றும் மியான்மா நாட்டைச் சேர்ந்த 12 மாதம் முதல் 28 வயது வரை உள்ளவர்கள் உள்ளனர்.
நல்ல உள்ளம் படைத்த பலரும் நன்கொடைகளை வழங்குகின்றார்கள். அரசும் ஒரு லட்ச ரூபாயைத் தந்து உதவியது. இந்த இல்லத்தில் படித்து வேலைக்குச் சென்ற பிள்ளைகள் திருமணம் ஆகும்வரை இந்த இல்-லத்துக்கு நன்கொடைகளை நன்றி உணர்வுடன் நல்கி வருகின்றனர். அடிக்கடி அந்த இல்லத்துக்கு வந்து வளர்ப்புத் தாயை வாஞ்சையுடன் பார்த்துச் செல்லுகின்றனர்.
சண்டைகளில் பலியான தீவிரவாதிகளின் குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட அபலைகளின் குழந்தைகள் என்று எவ்வித வேறுபாடுமின்றி இங்குப் போற்றி வளர்க்கப்படுகின்றார்கள்.
இவற்றைப் படிக்கும் நமது எண்ணங்கள் எங்கோ பறந்து செல்லுகின்றன அல்லவா!
நமது அன்புக்குரிய அம்மா மணியம்மையாரின் நினைவு
அதனால் ஏற்படும் உணர்ச்சி கலந்த நெகிழ்ச்சி நம் தொண்டைக்குழியை அடைக்கிறதே!
மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட ஒரு மாதம்கூட நிறைவு பெறாத அந்தச் சிசுக்களை வாரியணைத்து, வாஞ்சை மழை பொழிந்து தன்னுடைய பெயரையும், தந்தை பெரியார் பெயரையும் பெயரொட்டாக (ணி.க்ஷி.ஸி.வி.)த் தந்து வளர்த்து ஆளாக்கி உயர்த்திய அந்தத் தாயின் இன்னொரு சகோதரியோ இவர் என்று எண்ணும்போது பெருமிதமும், நன்றிக் கண்ணீரும் நம்மை திக்குமுக்காடச் செய்கின்றன அல்லவா! வாழ்க இந்தத் தாய்கள்
5.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக