இரண்டு செய்திகள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. ஒரு செய்தி
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.
கிருஷ்ணா அவர்கள் அமெரிக்காவில் இந்தியாவைப்பற்றி வெளியிட்டுள்ள ஒரு செய்தி இந்தியாவில் 20 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ரூ.50 வருவாய்கூட ஈட்டவில்லை என்பது.
இரண்டாவதாக, வெளிவந்துள்ள செய்தி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரு நாளைய வசூல் மட்டும் ரூபாய் ஒரு கோடியே 43 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய். இது அல்லாமல் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள்மூலம் 74 ஆயிரத்து 253 ரூபாயும், பிரசாதங்கள் விற்பனைமூலம் 10 லட்சத்து 45 ஆயிரத்து 464 ரூபாயும், தங்கும் விடுதிகள் மூலம் 64 ஆயிரத்து 10 ரூபாயும் கிடைத்ததாக திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிருள்ள மனிதர்கள் 20 கோடி பேர் நாள் ஒன்றுக்கு ரூ.50 வருவாய் பெற முடியாத நிலை. இரவு உணவு இல்லாமல் பட்டினியாகக் கிடப்போர் பல கோடி.
இந்த நிலையில், ஏழுமலையான் என்னும் குத்துக்கல்லுக்கு நாள் ஒன்றுக்கு இவ்வளவுப் பெரிய தொகை குவிகிறது என்றால், இதன் பொருள் என்ன?
மக்களிடத்தில் மனிதநேயம் என்பதைவிட மனிதர்கள்மீது பற்றுதல் வைப்பதைவிட கடவுள் நம்பிக்கை என்னும் பேரால் குழவிக் கல்லுக்கும், குத்துக்கல்லுக்கும் கொட்டி அழுகிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
சர்வசக்தி வாய்ந்தவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, அதற்குப் பணமும், பொன்னும், வைரமும் தேவைப்படுகிறது என்று நினைப்பது முரண்பாடல்லவா?
இந்தக் காணிக்கைகளைக் கொடுத்தால்தான் கடவுளின் கடாட்சம் கிடைக்கும், அருள்பாலிப்புக் கிட்டும் என்றால், அது கடவுளா லஞ்சம் வாங்கும் பேர்வழியா என்ற கேள்வி எழாதா?
கடவுளுக்கே காணிக்கை என்கிற இலஞ்சம் கொடுத்தால்தான் கருணை கிட்டும் என்றால், சாதாரண மனிதர்கள் இலஞ்சம் வாங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்? இலஞ்சம் என்பது இந்தக் கடவுள் என்கிற இடத்திலிருந்துதான் உற்பத்தியாகிறது என்பது புலனாகவில்லையா?
ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழித்துக்கட்ட முதலில் இந்தக் கோயில் கொடுக்கல்
வாங்கல் பக்தி முறையை ஒழித்துக்கட்டவேண்டும். ஆம் என்க!
27.9.2009
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக