கேள்வி: இந்து மதம் பெரும்பான்மை பெற்றதல்ல; பல்வேறு ஜாதிகளால் இந்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதுபற்றி....
பதில்: கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களிலும்கூட உட்பிரிவுகள் உண்டு; அமைச்சர்கள் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் பயன் ஏதும் இராது.
(கல்கி, 4.10.2009, கேள்வி பதில்,பக்கம்81)
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் மானமிகு மாண்புமிகு முனைவர் க. பொன்முடி கூறியதில் என்ன தவறு இருக்கிறது?
இந்து மதத்தில் இல்லாததை அவர் அப்படி என்னதான் கூறிவிட்டார்? ஆனால், அதற்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, கல்கிதான் அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கிறது.
கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களில் உட்பிரிவுகள் உண்டு, உண்மைதான்; ஆனால், அவை இந்து மதத்தில் உள்ள தீண்டாமையைப் போன்றதல்ல! தொடாதே, நெருங்காதே, பார்க்காதே என்கிற பாகுபாடுகள் கிடையாது. அந்த மதத்தில் உள்ளவர்கள் அதற்குரிய மதப் பாடங்களைப் படித்துத் தேர்ந்தால் பாதிரியாராகவோ, மவுல்வியாகவோ ஆக முடியும். ஆனால், இந்து மதத்தில் அந்த நிலை உண்டா?
அதற்கான காரணத்தைத்தான் அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார்.
ஒரு கிறித்துவன், முஸ்லிம் ஆகலாம்; ஒரு முசுலிம் கிறித்துவன் ஆகலாம்; ஆனால், ஒரு ஜாதி இந்து இன்னொரு ஜாதியாக மாற முடியுமா? அதற்கு அர்த்தமுள்ள இந்துமதத்தில் இடம் உண்டா?
இன்னும் சொல்லப்போனால், ஒரு முசுலிமோ, கிறித்தவரோ, இந்து ஆகவேண்டுமானாலும் அதற்கும்கூட இடர்ப்பாடு உண்டு. அப்படி இந்து மதத்திற்கு வரக்கூடியவர்கள் எந்த ஜாதியின்கீழ் வைக்கப்படுவார்கள் என்பதுதான் இந்து மதத்தின் ஆணிவேரைப் பிளக்கும் ஆயிரம் டாலர் கேள்வியாகும்.
அதுவும் இந்து மதத்தில் ஜாதிப் பேதம் என்பது பிறப்பின் அடிப்படையைச் சேர்ந்தது. செத்துச் சுடுகாட்டில் எரிக்க, புதைக்கச் சென்றால்கூட அங்கும் பறையன் சுடுகாடு, பார்ப்பான் சுடுகாடு இருக்கிறதே! இந்து மதத்தில் மனிதன் சாகிறான்; ஆனால், அவனைப் பிடித்த ஜாதி மட்டும் சாவதில்லை.
ஜாதியை ஏற்காதவன் இந்துவாக இருக்க முடியாது இதுதான் சாஸ்திரத்தின் சட்டத்தின் நிலைப்பாடு!
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, அமைச்சர் பொன்முடிக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, பெருமாள் போய் பெத்த பெருமாளான கதையாக அல்லவோ கல்கி கதைக்கிறது!
அமைச்சர் பொன்முடி ஒரு வரலாற்றுப் பேராசிரியர், வெள்ளையர் நீக்ரோ பற்றிய நிறப் பேதத்தைப்பற்றியும், இங்குள்ள ஜாதிப் பேதத்தைப்பற்றியும் ஒப்பிட்டு ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
அவர் ஒன்றும் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கவில்லை சரியாகத்தான் சரியானவைகளை இடித்துச் சொல்லியிருக்கிறார்.
2.10.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக