கோயில்கள் சுரண்டுவதற்குரிய கேந்திரங்களாக இருக்கின்றன என்பதில் அய்யமில்லை. வியாபாரத்தில் போட்டியிருப்பது இல்லையா? அதற்கேற்றாற் போல விளம்பரங்களையும் செய்வதில்லையா?
அதே நிலை கோயில்களுக்கிடையேயும் நிலவுவதைக் காண முடிகிறது. குறிப்பிட்ட ஒரு ஊரைச் சொல்லி அந்தவூர் கோயில் தான் சக்தி வாய்ந்தது என்று விளம்பரம் செய்கிறார்களே இதற்கு என்ன பொருளாம்?
திருவண்ணாமலை அருணாசல ஈசுவரரை நினைத்தாலே பாவம் போகுமாம். வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே வேத புரீஸ்வரர் பாவங்களை சின்னா பின்னப்படுத்தி விடுவாராம்.
இன்னும் சில கோயில்கள்
அவைபற்றி சிறப்பிதழ்களில் அடேய்யப்பா! இந்தப் பத்திரிகை வியாபாரிகள் படுத்தும் பாடு கொஞ்சமா நஞ்சமா?
வளமான வாழ்வு நல்கும் கோடிலீஸ்வரர் கோயில் (ஆனந்தவிகடன்) சுகமான பிரசவத்துக்கு சித்தன்னவாயல் சுகந்த குந்தளாம்பாள் (குங்குமம்) இழந்த பொருளைப் பெற வேண்டுமா? தேடி வாருங்கள் தஞ்சபுரீஸ்வரர் கோயில் (திருவையாறு அருகில்) (தினத்தந்தி)
வழக்குகளில்வெற்றி பெற வேண்டுமா? கொல்லங்குடி வெட்டுடையாள் காளி
(சிவகங்கை அரு-கில்)
(ராணி)
இப்படி எடுத்துக்காட்டிக் கொண்டே போகலாம். கடன் தீர்க்கும் விநாயகர் என்றெல்லாம்கூட உண்டு. இந்தக் கோயில்களுக்கெல்லாம் சென்றால் சுகப்பிரசவம், வளமான வாழ்வு, வழக்குகளில் வெற்றி, இழந்த பொருள் மீட்பு, கடன் தீர்தல் இவையெல்லாம் கிட்டும் என்பது உண்மைதானா? இவற்றை உள்ளபடியே நம்புபவர்கள் உண்டா? இதுமாதிரி பலன் கிட்டியிருக்கிறது என்று ருசுபடுத்த முடியுமா?
பின் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கோயிலுக்கான விளம்பரம்! பக்தர்கள் வருகை உண்டியல் நிரம்புதல் காணிக்கைகள் குவிதல்
இவையல்லாமல் வேறு என்னவாம்? ஒரு கோயிலைவிட இன்னொரு கோயில் உயர்ந்தது சக்தி படைத்தது என்கிற பாணியில் விளம்பரம் செய்வது வியாபார யுக்திதானே!
ஒரு கோயில் சாமியை இன்னொரு கோயில் மட்டப்படுத்திப் பேசுவது தானே!
பக்தி வியாபாரமாகி விட்டது என்ற சங்கராச்சாரியாரும், வாரியாரும் சொல்லியிருக்கிறார்களே!
கடவுள் ஒருவர் அவர் உருவமற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அதற்கு முரணாக இப்படி கதையளப்பது ஏன்?
ஒவ்வொரு விஷயத்துக்கும் கடவுளின் டிபார்ட்மென்டா இவை?
பக்தர்களே, சிந்திப்பீர்களா?
7.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
7.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக