அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விபத்தில் சிக்கிய மாணவர் ஒருவர் மரணம் அடைந்ததையொட்டி தொடர் நிகழ்வாக சில வன்முறைகள் நடந்தேறியுள்ளன. அதன் விளைவாக மூவர் பலியாகியுள்ளனர்.
வடநாட்டில் இருந்து வந்த ஹோலிப் பண்டிகை அண்மைக்காலமாக தமிழ்நாட்டிலும் தொற்றிக்கொண்டு விட்டது.
அதுவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த வடநாட்டைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாணவர்களும், பிகார் மாணவர்களும் கோலாகலமாகவே கொண்டாடியுள்ளனர் என்று ஏடுகள் விலாவாரியாகத் தெரிவிக்கின்றன.
அண்மையில் சென்னையில் வேல்ஸ் கல்லூரியில் வட இந்திய மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் இடையே கைகலப்பும், மோதலும் நடந்திருக்கின்றன.
வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கவரும் நிலையில், அவர்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. முரட்டுத்தனமான நடவடிக்கை என்பது அவர்களின் இயல்பாகவே இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் மாநிலப் பிளவுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ளும் பொல்லா நிலை ஆபத்தானது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குப் படிக்கச் செல்வதுண்டு. பயிற்சிகளுக்குச் செல்வதும் உண்டு; பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்காகத் தேர்வு எழுதவும் செல்கின்றனர்.
உண்மை நிலவரம் என்னவென்றால், வடமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களும் சரி, வேலை வாய்ப்புக்காகச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் சரி வேறு வகையான கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர். தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழ்நாட்டுக்கு ஓடிவரும் நிலைதான் இருந்து வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு வரும் பிற மாநில மாணவர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. அவர்கள் சொந்த மாநிலத்தில் இருப்பதைவிட நிம்மதியாகவே இருக்கின்றனர். பணியாற்றும் இடங்களிலும் இதே நிலைதான்.
பிரச்சினை வடநாட்டு மாணவர்களால்தான் என்கிறபோது, இதனை அலட்சியப்படுத்திவிட முடியாது.
இந்தத் தொற்றுநோய் ஒவ்வொரு நிறுவனத்திற்கும், கல்விக் கூடங்களுக்கும் பரவுமேயானால், அதன் விளைவு விபரீதமாக ஆகக்கூடும். பெற்றோர்களை அழைத்துப் பேசி சுமூக உறவை வளர்க்க வழிகாணவேண்டும்.
வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களைக் கூவிக் கூவி அழைக்கும் வேலையை விட்டுவிட்டு உள்நாட்டு மாணவர்களுக்குக் கதவினைக் கொஞ்சம் தாராளமாகத் திறந்துவிடும் தாராள மனப்பான்மையை வரவழைத்துக் கொள்வது தான் நல்லது!
தமிழ்நாட்டில் சவுக்கார்ப்பேட்டை என்று ஒரே ஒரு பகுதி இருந்தது; இப்பொழுது சென்னை மாநகரமே சவுக்கார்ப்பேட்டையாகி விட்டது. கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறிவது நல்லதல்ல!
8.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக