கடவுளை மற,
மனிதனை நினை என்று சொன்னார் தந்தை பெரியார். அது ஏதோ சொல் அலங்காரம் அல்ல நடைமுறை தத்துவம் வாய்ந்தது என்பதற்குப் பெரிய ஆய்வரங்கங்கள் தேவையில்லை. இதோ ஒரு செய்தி டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் வெளிவந்துள்ளது
(16.6. 2010 ).
திருவண்ணாமலை நகரத்தில் அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியும், மலை கிரிவலப் பாதையிலும் தங்கியிருக்கும் சாதுக்களும், சாமியார்களும் கலைஞரின் உயிர் காக்கும் உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்கின்றனர். மாநிலத்திலேயே இத்திட்டத்தின்கீழ் சாமியார்களும், சாதுக்களும் பதிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இவர்களைப் பதிவு செய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் 15 ஆம் தேதியன்று வட்டாட்சியர், அலுவலகத்தில் 180 சாதுக்கள் நிழல் படமெடுக்கப்பட்டனர் என்று கூறினார். அருணாசலேஸ்வரர் கோவில் நிருவாகம் அளித்த அடையாள அட்டையையே அவர்களின் வாழ்விடங்களுக்கான அத்தாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின்கீழ் அவர்கள் பயன்பெற பதிவு செய்யப்பட்டுள்து. வரும் நாள்களில் மேலும் 100 சாதுக்கள் பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மேற்கண்ட செய்தி எதைத் தெரிவிக்கிறது? திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரர் இருக்கிறாரே அவர் என்ன சாதாரணமானவரா? வேதபுரீஸ்வரர் கோவில் இருக்கும் வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே சகல பாவங்களும் பஸ்பம் ஆகும் என்றால். திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரரை நினைத்தாலேயே எல்லா வகையான பாவங்களும், தொல்லைகளும் நிர்மூலம் ஆகும் என்று சொல்லி வைத்துள்-ளனர்.
அப்படிப்பட்ட அருணாசல ஈஸ்வரர் கோவிலைச் சுற்றி வாழும் கிரிவலப் பாதைகளில் டேரா அடித்து வாழும் சாமியார்களும், சாதுக்களும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து-கொண்டுள்ளனர் என்றால், இதன் பொருள் என்ன?
அருணாசல ஈஸ்வரரை நம்பிப் பயன் இல்லை; மாறாக முதலமைச்சர் கலைஞரைத்தான் நம்பவேண்டும் என்ற முடிவுக்கு இவர்கள் வந்துவிடவில்லையா?
அவர்களுக்கே மிக நன்றாகத் தெரியத்தான் செய்கிறது. கோவில் என்பதில் அதில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் கல் என்பது கறாராகவே பக்தர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
ஏதோ சுற்றுச்சூழலை அனுசரித்தும், கோவிலை நம்பிப் பிழைப்பு நடத்தவேண்டியுள்ளதே என்ன செய்வது
பக்தியிருப்பதுபோல காட்டிக் கொள்ளத்தானே வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தாலும் அவர்கள் காலத்தைக் கடத்துகிறார்களே தவிர,
மற்றபடி கடவுளாவது
வெண்டைக்காயாவது. அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அதனால்தான் கடவுளை மறந்து முதலமைச்சரை நம்புகின்றனர்.
காலம் கடந்தாவது கடவுளை மற,
மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துதான் உண்மை, உண்மையிலும் உண்மை என்பதை மற்றவர்களும் உணர்வார்களாக!
29.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக