உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசியல்வாதி. அவர் மேலும் மேலும் உயரே பறக்கவேண்டுமாம். அதற்காக உயரே பறக்கும் ஓர் ஆந்தையை அடித்தே கொன்றிருக்கிறார்.
ஆமாம், ஆந்தைக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமில்லாமலா மந்திரவாதி சொல்லியிருப்பார்?
அரசியலில் நீங்கள் ஆகாயத்தில் பறக்க வேண்டுமா? பொருளாதாரத்தில் மொத்தத்தில் நீங்கள் மொத்தமான மனிதராக மாறவேண்டுமா?
இதற்கெல்லாம் எதற்காக அலட்டிக் கொள்ளவேண்டும்? ஏன் வெட்டி முறிக்க வேண்டும்?
உத்தரப்பிரதேசம் இஸலாம்பூரில் ஒரே ஒரு அரசியல்வாதி காங்கிரஸ்காரரான லோகேந்திர சர்மா.
எடுத்த எடுப்பிலேயே பெரிய ஆளாக ஆகி விடவேண்டும் என்பதில் ஏகப்பட்ட ஆவேசம்!
ஒவ்வொரு தீபாவளியின்போதும் ஆந்தைகளை வேட்டையாடிக் கொல்லுவாராம். மந்திரவாதிகள் நடத்தும் பேய் விரட்டும் பூஜைகளிலும் ஆர்வமாகக் கலந்துகொள்வாராம்.
கோபுரத்தில் குடியிருக்கும் ஆந்தைகளைக் கொன்றால் உங்கள் புகழ் கோபுரத்தின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கும் என்று மந்திரவாதி ஒருவன் அவர் காதில் போட்டு வைக்க, அவ்வளவுதான் புறப்பட்டார் இந்த ஆசாமி கோயில் கோபுரத்தை நோக்கி. போட்டுத் தள்ளினார் ஓர் ஆந்தையை. (சிங்கத்தைப் பிடிக்கச் சொல்லுவதுதானே?)
இந்தத் தகவல் பிராணிகள் நல ஆர்வலர்களின் காதில் விழுந்ததுதான் தாமதம்! வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
ஆந்தையோ அழிந்துவரும் அரிய பறவை வகையைச் சார்ந்தது. அதனைக் கொன்று இருக்கிறார் இந்த அரசியல்வாதி; விடக்கூடாது. அவர் கைகளில் விலங்கை மாட்டியே தீரவேண்டும் என்று விடாப்பிடியாகக் கூக்குரல் கொடுத்தனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் ஆணை பிறப்பித்துவிட்டார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மந்திரவாதி ஏழாண்டு காலம் சிறையில் கம்பி எண்ண வேண்டுமாம்.
அரசியலில் பெரிய ஆளாக குபேரன் ஆக, கருத்துத் தானம் செய்த மந்திரவாதி, ஆந்தையைக் கொன்றால் ஏழாண்டு காலம் சிறை என்பதைச் சொல்லவில்லையே!
மந்திரவாதிதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அந்த அரசியல்வாதி நீதிமன்றத்தில் சொன்னால், மந்திரவாதிக்கும் இருக்கிறது மொத்து! செயற்கையாகவே உயிரை கண்டுபிடித்துள்ள இந்த அறிவியல் உலகத்தில் ஆந்தையைக் கொன்றால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுகிற, நம்புகிற ஆசாமிகளும் இருக்கிறார்களே!
30.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக