ஞாயிறு, 16 ஜூலை, 2017

வெள்ளுடை வேந்தர்


``வெள்ளுடைய வேந்தர் சர் பிட்டி தியாகராயரின் பிறந்த நாள் இந்நாள் (1852).

இந்தப் பெரு மகனார்தான் திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர்களுள் முக்கியமான சீலர் ஆவார். அவரின் பொதுத்தொண்டு சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது  1882 முதல் 1925 வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். திருத்தியமைக்கப்பட்ட நகராட்சி சட்ட திட்ட விதிகளின்படி சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராக 1920 இல் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சென்னை மாநிலத்தின் ஆட் சிப் பொறுப்புக்கு நீதிக்கட்சி வருவதற்கு முன்னோடி  சென்னை மாநகராட்சியின் தலைவராக, வெள்ளுடை வேந்தர் பி. தியாகராயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அந்தத் தேர்தல் கூட பார்ப்பனர்  பார்ப்பனர் அல்லாதார் என்ற உணர்ச்சிகளின் வீச்சுகளுக்கி டையேதான் நடைபெற்றது.

தியாகராயரை எதிர்த்து நின்றவர் ரங்காச்சாரி என்ற பார்ப்பனர். ரங்காச்சாரிக்கு 17 வாக்குகளும், வெள்ளுடை வேந்தர் தியாகராயருக்கு 28 வாக்குகளும் கிடைத்தன. 1920 முதல் 1921, 1922 என்று தொடர்ந்து மூன்றாண்டுகள் தலைவராக இருந்து சாதனை படைத்த பெருமகனார் ஆவார்!

அவர் ``மாநகரத் தந்தையாக இருந்து பரிபாலனம் செய்த காலத் தில்தான் கல்விக்கென்று தனிக்கவனம் செலுத்தப்பட்டது. அண்மையில்கூட பள்ளிகளில் மதிய உணவு, சத்துணவு அளிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதப் போர் நடைபெற்றது. காமராசர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோர் இத்துறையில் ஆற்றிய பணிகள் எல்லாம் பேசப்பட்டன பொருத்தமாக. அதேநேரத்தில், இதற்கு முன்னோடியாக விளங்கிய ``வெள்ளுடை வேந்தர் குறித்து யாரும் தொடவில்லையே என்ற ஏக்கம் பிறந்தது.

தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்தபோது தான், தொழிலாளர்கள் வாழ்ந்த பகுதிகளில் மாணவர்களுக்கு இலவசமாகக் காலைச் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. இந்தப் பணி முதன்முதலில் தொடங்கப்பட்டது சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்தான். மாணவர்களுக்குக் கரும் பலகைகளும், புத்தகங்களும் கூட இலவசமாக வழங்கப்பட்டன.

அந்த நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் தான் சென்னைப் பெருநகரம் 1959 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலும் தி.மு..,வின் ஆட்சிப் பொறுப்பிலேயே இருந்து வருகிறது. தி.மு.., ஆட்சி தமிழ்நாட்டில் வருவதற்கும் இதுதான் முன்னோட்டமாகும்.

இன்று வெள்ளுடை வேந்தர் சிலைக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர்மலை அணிவிக்கச் சென்றபோது, வணக்கத்துக்குரிய மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தலைவரை வரவேற்று, சால்வை அணி வித்தது எல்லாம் இந்த வரலாற்றின் தொடர்ச்சிதானே?

முதன்முதலில் தி.மு.., சென்னை மாநகராட்சியில் மேயர் பதவியை ஏற்றுக்கொண்டபோது, தி.மு.., உறுப்பினர்களுக்கு அறி ஞர் அண்ணா அவர்கள் கூறிய அறிவுரை மாநகராட்சி வளாகத்தில் உள்ள வெள்ளுடை வேந்தரின் சிலைக்கு உச்சிமுதல், கால்வரை தொடக்கூடிய மாலையை அணி விக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

``வெள்ளுடை வேந்தர் உடை யில் மட்டுமல்ல, உள்ளத்திலும் வெண்மைக்குச் சொந்தக்காரர். அவரின் பிறந்த நாளில், அவர் விதைத்த உணர்வின் அறுவடைகள் பட்டுப் போகாமல் பாதுகாக்கச் சூளுரை எடுப்போம்!
வாழ்க தியாகராயர்!

27.4.2007(விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...