``காதலர் நாள் என்று இன்று உலகம் முழுவதும் கைக்கொள்ளப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கி தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்வதாகப் பொருள்.
இந்தியாவைப் பொறுத்தவரை இது ஓர் இறக்குமதிச் சரக்குதான்; கடந்த பத்தொன்பது ஆண்டுகாலமாக அறிமுகமாகி இருக்கிறது.
இதுபற்றி ஒட்டியும், வெட்டியும் கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக இந்துத்வாவைச் சேர்ந்த விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.
வாழ்த்து அட்டைகள் விற்கப்படும் கடைகளில் அத்து மீறிப் புகுந்து அவற்றை எரித்து தங்கள் எரிச்சலை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இன்னொரு சாரார் இந்துத்வா அமைப்புகளுக்கு எதிராக இருப்பவர்கள் கூட,
காதலர் நாளால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகக் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
காதல் என்பது ஒரு நல்ல உணர்வு. இருபாலர்களிடையே இந்த உணர்வு அரும்புவது என்பது தேசியக் குற்றமல்ல. மனிதன் என்று இருந்தால், மனம் உண்டு; அந்த மனத்தின் மணம்தான் காதல் உணர்வு.
நம் நாட்டில் ஒரு தவறான புரிதல் உண்டு; திருமணம் செய்துகொள்வதற்கு முன்புதான் காதல் திருமணத்திற்குப் பிறகு காதலாவது கத்தரிக்காயாவது என்று பேச ஆரம்பித்துவிடுகின்றனர். காதல் என்ற சொல்லுக்கு அன்பு என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. அந்த அன்பானது திருமணத்திற்குப் பின் தேவையில்லையா என்பது குறித்தும் காதலர் நாளில் சிந்திப்பது நல்லது.
இந்துத்வா சக்திகள் காதலர் நாளை வெறுப்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது.
காதல் என்பது ஜாதியைப் பார்த்து வருவதில்லை. ஆனால், பா.ஜ.க.,
உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் அடிப்படைக் கொள்கையோ ஜாதியைப் பாது காக்க வேண்டும் என்பதுதான். அவர்களின் குருநாதரான கோல்வால்கரின் ``சிந்தனைக் கொத்துகள் (Bunch of Thoughts) என்ற நூலில் (அது அவர்களின் வேதப் புத்தகம்) வருணாசிரமத்தைப்பற்றிப் பலபடப் புகழ்ந்து தள்ளுகிறார்.
இந்தக் கண்ணோட்டத்தில் தான் காதலால் ஜாதிக்குச் சமாதி கட்டப்படுமே என்கிற ஆத்திரத்தில் தான் இதனை அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், காதல் என்பது உயர்ந்த பண்பாடு அந்தத் தரத்தில் அதனை கடைப்பிடிக்க வேண்டும். வெறும் உடல் அழகு தான் காதல் என்ற கருத்தரிப்பு வேண்டாம்! பொதுவாக சினிமாக் காதல் மயக்கம் வேண்டாம்
வெறும் சதைக் கவர்ச்சிகளைக் காதல் என்றும் கொச்சைப்படுத்தவும் கூடாது
எச்சரிக்கை!
14.2.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக