ஈவ்டீசிங் என்று சொல்லப்படும் பெண் கேலி என்பது சமூகத்தின் வக்கிரப்புத்திக்கான அடையாளமாகும்.
மற்ற ஒருவரைத் தீண்டுவதற்கோ, சீண்டுவதற்கோ எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை கிடையாது. அப்படியொரு வானாளாவிய அதிகாரம் யாருக்குமே கிடையாது.
அதுவும் கல்லூரிகளில் படிப்பவர்கள் இத்தகு ஆபாச சேட்டைகளில் ஈடுபடுவது, நம் நாட்டுக் கல்வி முறையில் ஏதோ ஓரிடத்தில் அடிப்படைக் கோளாறு ஓட்டை இருக்கிறது என்பதைத் தொட்டுக் காட்டுகிறது.
போதும் போதாதற்கு சின்னத் திரைகளும், சினிமாக்களும் இளைஞர்களுக்கு இந்த வகையில் வகுப்புகள் நடத்துகின்றன.
சக மாணவியைக் கேலி செய்வது, ஆசிரியைகளையே மாணவர்கள் கிண்டலடிப்பது (ஆசிரியைகளை மாணவர்கள் மணந்துகொள்ளும் நிலையெல்லாம்கூட உண்டு) என்பவை எல்லாம் இவைகளில் சர்வ சாதாரணம்.
இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் இடம்பெற்றால்தான் இளைஞர்கள் திரைப்படத்துக்கு வருவார்களாம். அதன்மூலம் பட முதலாளிகள் கல்லாப் பெட்டி நிரம்பவேண்டாமா?
கேலி செய்பவர்களைத் தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கல்லூரிகளிலிருந்து வெளியேற்றலாம் எல்லாம் ஏட்டளவில் இருக்கிறது எந்தவித மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
பார்த்தார்கள் ஒரிசா மாநிலம்
குர்தா மாவட்டம் கைபதார் கல்லூரி மாணவிகள், பசங்களின் இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவுசெய்தார்கள் அரங்கேற்றமும் செய்தார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் படையாகத் திரண்டனர். கேலி செய்யும் அந்தக் காலிகளைப் பிடித்தார்கள். தலையை மொட்டை அடித்தார்கள். செருப்பு மாலை அணிவித்து கல்லூரி வளாகத்துக்குள் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்; ஊரார் பாராட்டினர்.
பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற நினைப்பை, சமூகத்தின் தவறான மதிப்பீட்டை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.
வாடி என்றால், வாடா என்று சொல்லும் துணிவு முதலில் பெண்களுக்கு வரவேண்டும் என்றார் தந்தை பெரியார். அவன் முறைத்தால் நீயும் முறைத்துப் பார் என்பார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள். இதன் பொருள் பெண்கள் எதிர்க்கத் தயாராகிவிட்டார்கள் என்கிற அபாய அறிவிப்பாகும்.
ஆந்திராவில் நடந்ததுபோல இங்கு இரண்டு இடங்களில் நடந்தால் அவ்வளவுதான், ஆண்கள் ஆட்டம் கப்சிப்!
16.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக