இந்நாள் வகுப்புரிமை நாள் (1950). அடக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பொறித்து வைக்கவேண்டிய பொன்னாள்.
1927 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு முறை, பார்ப்பன ஆதிக்கச் சக்திகளால் கழுத்து முறித்துக் கொல்லப்பட்டதை எதிர்த்து சீறும் புயலாய் எழுந்த எழுஞாயிறு தந்தை பெரியார்.
எழுக தமிழினமே! என்று ஈரோட்டுச் சிங்கம் அழைப்புக் கொடுத்தது.
1950 இதே நாள்தான் தமிழகத்தையே கொந்தளிக்கும் எரிமலையாக மாற்றிய நாள்.
எங்கும் கடையடைப்பு! கடையடைப்பு!! வேலை நிறுத்தம்! வேலை நிறுத்தம்!!
கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன! மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்தனர். வீதிக்கு வந்தனர்
இடி முழக்கம் செய்தனர். தேவை தேவை வகுப்புரிமை தேவை! என்ற முழக்கங்கள் தமிழ் மண்ணில் வெடித்து விண்ணைப் பிளந்தன.
அன்று 11 ஆம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.)
படித்துக் கொண்டிருந்த கடலூர் மாணவர் கி.
வீரமணி வகுப்பைப் புறக்கணித்து வகுப்புரிமைக்காகக் கோஷம் போட்டு மாணவப் பட்டாளத்துடன் அணிவகுத்துப் போர்ப் பாட்டுப் பாடிச் சென்றார்!
வந்த சுதந்தரம் இருந்த உரிமையைக் கொத்திச் செல்லவா? ஒடுக்கப்பட்ட மக்களை மனுதர்மச் சூலாயுதம் குத்திக் கொல்லவா!
நீதிமன்றங்கள் மனுநீதி மன்றங்களாக மாறியுள்ளதை மண்ணின் மைந்தர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
தந்தை பெரியார் குரலை ஏற்று கட்சித் தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டின் தலைவர்களும் அணி திரண்டனர். கறுஞ்சட்டைத் தலைவரின் நியாயக்குரலை கதர்ச்சட்டை காமராசரும் மதித்தார். அண்ணா அறைகூவலிட்டார்.
1950 டிசம்பர் 3 ஆம் தேதி திருச்சியில் வகுப்புரிமை மாநாட்டைக் கூட்டினார் தந்தை பெரியார். கல்வியாளர் மணவாள ராமானுஜம் தலைமை வகித்தார்.
உள்நாட்டுப் போரோ என்று மத்திய அரசு திகைத்தது. அதன் விளைவு வகுப்புரிமைக்காக முதன்முதலாக இந்திய அரசமைப்புச் சட்டம் அது அமலான ஓராண்டுக்குள்ளாகவே முதல் திருத்தத்தைச் சந்தித்தது (18.6.1951).
இன்றைய சமூகநீதி வெற்றிக்கெல்லாம் தந்தை பெரியாரால் தாய்ப்பால் ஊட்டப்பட்ட இந்நாளை நன்றியுடன் நினைவு கூர்வோம்!
14.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக