ஞாயிறு, 16 ஜூலை, 2017

பேய்


கலைஞர் தொலைக்காட்சிக்கு முதலில் ஒரு பாராட்டு! கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 10 மணிமுதல் 11 மணிவரை என்பது ரோஸ் நேரம்!

ஆவி, பேய் இருக்கிறதா என்கிற சூடான விவாதம்  சில வாரங்கள்!

பொதுமக்களும் மிக ஆர்வமாக பார்த்துச் சுவைத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த விவாதம் ஒரு திருப்பு முனையை எட்டியது. பேய் இருப்பது உண்மையானால், அதை எங்கள்மீது ஏவிவிட உங்களால் முடியுமா என்று பேய் நம்பிக்கையாளர்களைப் பார்த்து கேள்வி அணுகுண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டனர் பேய் மூட நம்பிக்கை மறுப்பாளர்கள். ஒரு நிமிடம் எதிர்தரப்பினர் ஆடிப் போய் விட்டனர். தோழர் சுரேந்தர்தான் அந்தச் சவாலை விட்டவர்.

இதில் இன்னும் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கழகத் தோழர் திருநாவுக்கரசு. ஒரு மாதத்திற்குள் அப்படியே பேயை தோழர் சுரேந்தர்மீது ஏவிவிட்டு அவர் உடலுக்குக் கேட்டை உண்டாக்கி அதன்மூலம் பேய் இருக்கிறது என்று நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கையெழுத்திட்டுக் காசோலையையும் அதே இடத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க முன்வந்தவர்!

இந்தச் சவாலை சசிகுமார் என்பவர் ஏற்று ஒரு மாதத்திற்குள் பேயை ஏவி காட்டுகிறேன் என்று சூளுரைத்தார்.

மிகமிக விறுவிறுப்பான கட்டத்திற்கு எகிறிக் குதித்தது இந்தப் பிரச்சினை.

ஒரு மாதம் ஓடிவிட்டது. என்ன ஆனார் தோழர் சுரேந்தர்? அவர் உடல்நலத்துடன் இருக்கிறாரா? பேய் அவரைப் பிடித்திருக்குமா என்பது போன்ற பரபரப்பான எதிர்பார்ப்புகள்!

அந்த வகையில், நேற்று இரவு ரோஸ் நேரம் மிகமிக முக்கியமானது. அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து வைத்து ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்தனர்.

சவால் விட்ட தோழர் சுரேந்தர் தம் துணைவியாருடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வந்தார்.

சவாலை ஏற்றுக்கொண்ட சசிகுமாரும் வந்தார் (அய்யப்ப பக்தர் கோலத்தில்). இரு தரப்பினரையும் தாராளமாகப் பேசவிட்டார் மேடம் ரோஸ்.

வேறு வழியின்றி தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம் என்றனர் பேய் தரப்பினர்.

பேய் இல்லை, இல்லவே இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர். ஆற்றல் வாய்ந்த ஒரு ஊடகத்தின் மூலம் ஒரு பெரிய மூட நம்பிக்கைக்கு மரண அடி கொடுத்த கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஒருங்கிணைப்பாளர் ரோஸ் மேடத்துக்கும், தோழர்கள் திருநாவுக்கரசு, சுரேந்தர் ஆகியோருக்கும் பகுத்தறிவாளர்கள் ஒருமுறை கைதட்டிப் பாராட்டலாமே!

21.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...