கேள்வி: நம் நாட்டில் இறைவுணர்வு குறைந்து வருகிறதோ?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.
...கோயிலுக்குப் போறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு!
பழனியில் எம் பெருமான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடியைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால், ஒழுக்கமும் இருக்கிறதென்று சொல்லலாமே?
பதில்: ஊஹூம்... அப்படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை...
(ஆனந்தவிகடன், 2.12.1991).
கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.
சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?
காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்தவும், திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தவுமே அவதாரம் எடுத்ததாகச் சிண்டை விசிறிவிட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.
திருப்பதியில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாம்.
இதற்கான காரணங்கள் வெளிப்படை. திருப்பதி கோயிலுக்குச் சொந்தமானதங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடுகளும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்றன.
விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்கெனவே வெளிவந்ததுதான்.
திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்பதைக் கண்டுபிடிக்கத்தான்.
திருப்பதி டாலர் விற்பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.
ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் நினைவில் இருக்குமே!
பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?
24.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக