ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஒபாமா




அமெரிக்க அதிபர் ஒபாமா ஓர் இனப் பிரச்சினையை வெகு எளிதாக தீர்த்து வைத்துள்ள செயல், இனிய அணுகுமுறைக்குக் கிட்டத்தட்ட மகத்தான வெற்றியாகும்.
அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும், கறுப்பினப் பேராசிரியர் ஒருவருக்கும் ஏற்பட்ட மோதல் அது.
கடந்த மாதம் ஜூலை 16 ஆம் தேதி, ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி. இது தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் ஹென்றிகேட்டிடம் காவல்துறை விசாரிக்கச் சென்றபோது, போதிய ஒத்துழைப்புக் கொடுக்காமல் காவல்துறையினரையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார்.
விளைவு? காவல்துறை அதிகாரியாயிற்றே... விடுவார்களா? பேராசிரியரை நான்கு மணிநேரம் காவலில் வைத்துவிட்டனர்.
அந்தக் கறுப்பினப் பேராசிரியரோ அதிபர் ஒபாமாவின் அருமருந்தன்ன நண்பர்.
அதிபராக இருந்தாலும் ஒபாமாவும் மனிதர்தானே. தன் நண்பரான கறுப்பினப் பேராசிரியருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை மிகவும் கடிந்துகொண்டார்.
அவ்வளவுதான்... அதிபராக இருந்தால் என்ன... காவல்துறை சங்கம் சும்மா விடுமா? போர்க்கொடி தூக்கியது.
ஒரு பக்கம் வெள்ளைக் காவல் அதிகாரி - கறுப்பு இன பேராசிரியர் மோதல் என்ற ஒரு நிலை தலையெடுப்பு. இன்னொரு பக்கமோ தம் நண்பர் என்பதால் அதிபர் அவசரப்பட்டு அதிகாரிகளைக் கடிந்துகொண்டுவிட்டார் என்ற குற்றச்சாற்று.
இரண்டு இரும்புப் பிடிகளுக்கிடையே அதிபர் ஒபாமா கொஞ்சம் திணறித்தான் விட்டார். ஆனாலும், சில மணித் துளிகளுக்கிடையே அதற்கொரு தீர்வு அதிபரின் மூளையில் மின்வெட்டாகத் தெறித்தது.
சம்பந்தப்பட்ட இருவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். ஒரு சிறு பீர் விருந்து (இந்தியாவில் தேனீர் விருந்துபோல) அளித்து கலகலப்பாகச் சிரித்துப் பேசி இறுக்கத்தைக் குறைத்து, இன மோதலாக மாறுமோ என்ற அச்சத்திற்கு வேலையில்லாமல் சுமூகத் தென்றலில் இருவரையும் குளிப்பாட்டினார்.
பெரிய கதவின் பூட்டினை சிறு சாவி திறந்து விடுவதுபோல, மிகப்பெரிய பிரச்சினையையும்கூட எளிதான இனிய அணுகுமுறையால் எளிதில் தீர்த்துவிடலாம் என்பதற்கு அமெரிக்க அதிபர் வழிகாட்டியாக இருக்கிறார்.
அதிகாரமும், தன்முனைப்பும் சிறுபொறியையும் பெரிய தீயாக மாற்றும்; அன்பும், அரவணைப்பும், இன்முகமும் காட்டுத் தீ போன்ற காரியத்தைக்கூட கடைக்கண் குளிர்ச்சியால் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்பதற்கு அண்மையில் நடந்த ஓர் எடுத்துக்காட்டு இது.
ஆம், அணுகுமுறையே வெற்றியின் சாதனையின் திறவுகோல்!
11.8.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...