ஞாயிறு, 16 ஜூலை, 2017

எருமை மாடு


மக்கள் மத்தியில் எந்த நிலையிலும் பகுத்தறிவு உணர்ச்சி மூண்டுவிடக் கூடாது என்ப திலே ஆதிக்க மூர்க்கர்கள் மிகவும் கவனமாகவே இருப்பார்கள். குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை எந்த மூடத்தனத்தையாவது புரளிபடுத்தி விடுவார்கள். அது குறிப்பிட்ட காலம்வரை ஆடி அடங்கி விடும். அதன்பின் அதைப் பற்றிய பேச்சு இருக்காது.

சகோதரிக்குப் பச்சை புடைவை வாங்கித் தாருங்கள், சிவப்புப் புடைவை வாங்கித் தாருங்கள் என்று கிளப்பி விடுவார்கள். மூட நம்பிக்கை வியாபாரிகளும், ஜவுளி வியாபாரிகளும் சேர்ந்த முடிச்சுமாரி வேலையாகத்தான் அது இருக்கும்.

இந்த ஆண்டு தைமுதல் நாள் சிம்ம லக்கனத்தில் பிறந்தது என்று கூறி, வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆகாது; வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள் என்று கிளப்பி விட்டனர்.

இதற்கிடையே 17 ஆம் தேதி இரவு காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்குள் எருமை மாடு புகுந்துவிட்டது. இதனால் காஞ்சீபுரம்வாழ் மக்களின் தலைக்கு வந்ததே ஆபத்து என்று அச்சத்தைக் கிளப்பி விட்டனர்.

எருமையைப் பார்த்தவர்கள் யார்? சொன்னவர்கள் யார்? யாருக்குமே தெரியாது  வதந்தி என்பது யார் பெற்ற பிள்ளை? இதற்கு இதுவரை பதில் கிடைத்ததில்லை.

கோயிலில் எருமை புகுந்து விட்டதால் என்ன செய்ய வேண்டுமாம்? வீட்டு வாயிலில் வாழை இலை போட்டு மூன்று அல்லது அய்ந்து எண்ணிக்கை கொண்ட விளக்குகளை ஏற்றி வைக்கவேண்டுமாம். ஏன், ஆறு விளக்கு வைத்தால் என்னாகும்? (யாருக்குத் தெரியும்!)

காஞ்சீபுரத்திலே வாழக் கூடிய கிறிஸ்தவர்களோ, இசுலாமியர்களோ என்ன செய்யவேண்டும்? அவர்கள் விளக்கு ஏற்றி வைக்காததால் என்ன நேர்ந்துவிட்டது?

திருப்பதியில் தாயாரம்மாள் தாலி கழன்று விழுந்துவிட்டது என்று கூறி, கணவன்மார்கள், மனைவிமார்களுக்குப் புதுத் தாலி கட்டவில்லையா?

கோயிலுக்குள் பசுமாடு புகுந்திருந்தால் ஒருக்கால் நல்ல சகுனம் என்றும் சொல்லியிருப்பார்களோ! காரணம், புது வீடு செல்லும்போது முதலில் பசுமாட்டைத் தானே உள்ளே அனுப்புகிறார்கள்?

ஆறறிவை இழந்து செயல்படுகிறவரைக்கும் மனிதன் மாடாகத்தான் இருப்பான் என்பதற்கு அடையாளமே இதுபோன்ற மாடு கதைகளும், நம்பிக்கைகளும்!

சிந்திக்க அஞ்சுபவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் மதவாதி!

சிந்திப்பவனே பகுத்தறிவுவாதி  அவன்தான் மனிதன்!

22.1.2007 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...