ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிள்ளை - யார்?


சென்னை  கண் மருத்துவமனை இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்த கருத்து  இவ்வெழுத்தாளரின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தைத் தெ(ரி)ளிவிக்கிறது.
எதிலும் வித்தியாசமான சிந்தனையாளர் என்ற மதிப்-பீட்டிலிருந்து விலகிப் போகும் விபரீதம் இதில் விவரமாகவே யிருக்கிறது.நான் நாத்திகன்; ஆனால் பிள்ளையாரைப் பிடிக்கும். பக்தர்களும் பரிகசிப்பார்கள்; பகுத்தறிவாளர்களும் ஏளனம் செய்வார்கள். எதிலும் திட்டவட்டமான சிந்தனை இல்லாதவர்கள் இப்படிதான் ஆப்பதனை அசைத்துவிட்டு அபாயகரமாகச் சிக்கிக் கொள்வார்கள். ஆத்திகம், நாத்திகம், பக்தி இவை எதிலும் தெளிவில்லாதவர் என்பதைத் தெளிவாகவே இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டாரே!

நாத்திகன் என்றால் யார் என்ற சிந்தனையில் தெளிவாக இருந்தால் பிள்ளையாரை எப்படி பிடிக்கும்? ஒருக்கால் சாணியை, களிமண்ணைப் பிடித்து வைத்துப் பிள்ளையார் என்று கூறி விடுவதால் பிடிக்கும் என்கிறாரோ ஒரு வார்த்தை விளையாட்டுக்காக! (எழுத்தாளர் அல்லவா!)நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப்பேன் என்கிறார்.

நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமுன் பிள்ளையாரை நினைப் பேன் இதுபக்தியல்ல என்று பேசியிருக்கிறார்.

சரி, நினைத்தால் என்ன நடந்ததாம்? கண் மருத்துவமனை விழாவில் இப்படி பேசுவதற்கு முன்புகூட பிள்ளையாரை நினைத்துக் கொண்டுதான் இப்படிப் பேசி-யிருப்பாரோ! பிள்ளையாரை நினைத்துக் கொண்டு பேசினால் இப்படித்தான் தத்துப்பித்தென்று திரிபுவாத நோய்க்கு ஆளாக நேரிடும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இவர் எழுதும் எழுத்துகளுக்கெல்லாம் உரிமை கொண்டாடப் போகிறவர் பிள்ளையாரா தோழர் ஜெயகாந்தனா? எந்தப் பிள்ளையாரை நினைத்துக் கொள்கிறார்? ஒரு பிள்ளையாரா இரு பிள்ளையாரா? ஒரு நீண்ட பட்டியலே உண்டே!

பார்வதி தேவியாரின் அழுக்கில் பிறந்த பிள்ளையாரா? சிவன் ஆண் யானையாகவும் பார்வதி பெண் யானையாகவும் மாறிக் கலவி செய்து ஈன்றெடுத்த யானை முகப் பிள்ளையாரையா?

சமுத்திர ஸ்நாதனம் செய்து கடலையே தம் துபிக்கையால் குடித்து, அதன்பின் சிறுநீராகக் கழித்ததால் கடல்நீர் உப்புகரிக்கும் நிலைக்கு ஆனதாக உளறப்படும் புராணப் பிள்ளையாரையா?

அம்மாவைப் போலவே தனக்கு மனைவி வேண்டும் என்ற கேட்ட வக்கிரப்புத்தி படைத்த ஆலமரத்தடி பிள்ளையாரா? எழுதவே கூச்சமாக இருக்கிறதே. அந்த வல்லபை கணபதியையா?

போயும் போயும் பிடித்தாரே முருங்கைக் கொம்பை!

தோழர் ஜெயகாந்தன் அவர்களின் எழுத்து களுக்கு இருக்கும் கம்பீரத்தையும் ஆளுமையையும் விநாயக சதுர்த்தியன்று பிள்ளையாரைக் கடலில் கரைப்பதுபோல ஆன்மீகக் கடலில் விழுந்து கரைத்துவிட வேண்டாம்

என்ன இருந்தாலும் தோழர் ஜெயகாந்தன் ஒரு தமிழர் ஆயிற்றே!

(2.1. 2010 விடுதலை ஒற்றைப் பத்தி -3)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...