நாளைய தினம் (7.7.2007) நாள் காட்டியின்படி 7.7.7 ஆகும். தோற்றத்தில் இது ஒரு ஈர்ப்பு என்பதல்லாமல் வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இதில் கிடையாது என்பது கடுகளவு புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவோருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், மதவாதிகள் சும்மா இருப்பார்களா? தோட்டத்தில் பாம்பு படம் எடுப்பதுபோல, இயல்பாகவே ஒரு பூ பூத்துவிட்டால் போதுமே
அதற்கொரு காது வைத்து, மூக்கு வைத்து, அற்புத முலாம் பூசி,
கடைசிக் கடைசியாக மக்கள் சட்டைப் பையில் இருக்கும் காசைக் கறக்கிற வரை ஓயமாட்டார்கள் அல்லவா?
மூட நம்பிக்கை என்பது இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்?
ஒருமுறை விவேகானந்தரைப்பற்றி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தந்தை பெரியாரிடம் கேட்டார். தந்தை பெரியார் பதிலைக் கேட்ட அந்த வெளிநாட்டுக்காரர் அதிர்ந்து போய், நீங்கள் என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை எங்கள் அமெரிக்காவிலேயே கொண்டாடுகிறோமே? என்றார். துப்பாக்கியிலிருந்து ரவை புறப்படுவதுபோல, தந்தை பெரியார் உடனே அளித்த பதில் முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? என்ற கேள்விதான். அதிர்ந்தே போனார் அந்த அமெரிக்கர்.
அதுபோலத்தான், 7.7.7 தேதி கூத்தும்! இது ஒரு அதிர்ஷ்ட நாளாம். அன்று ஏராளமான எண்ணிக்கையில் திருமணம் நடக்கப் போகிறதாம். காரணம், அது ஒரு லக்கி நம்பராம்!
9 என்றால் ராசி,
13 என்றால் கெட்ட நாள் என்று கருதுகிற பெரிய மனிதர்கள்
பதவிக்காரர்கள் இங்கு இல்லையா?
இதைப் போன்றவர்கள் உலகின் பல நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரத்தில், 13 என்பதை கெட்ட நாள் என்று நம்பும் மூடத்தனத்தை முறியடிக்கும் வகையில் 13 எண்ணைக் கொண்டே சங்கம்கூட வைத்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத் தகுந்ததாகும்.
சூதாட்டக் கிளப்புகள், உணவு விடுதிகள், லாட்டரி நிறுவனங்கள் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடப் போகின்றனவாம்! சூதாட்ட விடுதிகளில் 777 என்ற எண் கிடைத்தால் அவருக்கு ஜாக்பாட் பரிசு வழங்கப்பட உள்ளதாம். நட்சத்திர விடுதிகளில் இந்த நாளில் மட்டும் ஒரு நாள் வாடகை அமெரிக்கன் டாலரில் 7777 என்று நிர்ணயிக்கப்படுகிறதாம்.
மக்கள் மடையர்களாகவும், அதிர்ஷ்டத்தை நம்பும் பைத்தியக்காரர்களாகவும் இருக்கும்வரை சுரண்டல்காரர்களுக்கு வேட்டைக்காடு! அதைவிட வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
6.07.2007(விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக