நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் மறைவு நாள் இந்நாள்
(1979). தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு நாளில் - அவர் மறைவுற்றார்.தந்தை பெரியார் இதயத்தில் அவருக்கு எத்தகைய இடம் இருந்தது என்பதற்கு அடையாளம்தான் - அவர் பெயரால் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தை தந்தை பெரியார் தலைநகரில் அமைத்ததாகும்.
கலை - மக்களுக்குக் களையாக இருக்கிறதே என்பதில் சீற்றம்கொண்ட தந்தை பெரியாருக்கு நடிகவேள் இராதா அவர்கள் வாராது வந்த மாமணியாய்க் கிடைக்கப் பெற்றார் -
கொள்கைக்காக நாடகங்களை அரங்கேற்றினார்.
மக்கள் மத்தியில் தந்தை பெரியாரின் புரட்சி விதைகளைத் தூவினார். சிரிக்க வைத்து சிந்தனை நரம்புகளைத் தட்டிவிட்டார்.
கடுமையான மூடநம்பிக்கைவாதிகள்கூட நடிகவேள் இராதா அவர்களின் நாடகத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால், அந்த நொடியிலேயே மன மாறுதலை அடையும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் தனி ஆற்றல் கொண்டவை - அவரது நாடகங்கள்.
நாடக கதை வசனங்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல் துறை அதிகாரிகளிடமும் அளித்து முன்கூட்டியே ஒப்புதல் பெறவேண்டும் என்று சட்டம் செய்தார்கள் என்றால், நடிகவேளின் நாடகங்கள் நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அவர் நடத்திக்காட்டிய இராமாயண நாடகம்வரலாற்று ஆதாரங்களைக் கொண்டது. நாடகம் துவங்குவதற்கு முன்பே திரைக்குப் பின்னணியிலிருந்து அத்தகைய ஆதாரங்களை எடுத்துக் கூறுவார். அந்த நூல்கள் நாடக மேடையிலேயே இருக்கின்றன.
சந்தேகப்படுவோர் நாடகம் முடிந்து அவற்றைக் காணலாம் என்பார்.
இதனைப் பொறுக்க முடியாத ஒரு கூட்டம், இராதா நடத்துவது கீமாயணம் என்று பிரச்சாரம் செய்தனர். எல்லாவற்றையும் கடந்து அவர் கலை உலகில் வெற்றிக் கொடி நாட்டினார். அவர் நடிப்பு என்பது தனித்தன்மையானது
- அந்தச் சிகரத்தை எட்ட யாரும் இதுவரை பிறக்கவில்லை. வாழ்க நடிகவேள்!
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக