திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மார்க்சும் - லெனினும்


இந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரியில் - இந்த நாட்டுத் தன்மைக்கு ஏற்ற மாதிரியில் தொழிலாளர் பிரச்சினைகளை அணுக வேண்டும்.  மற்ற நாடுகளில் நடந்ததுபோல் இங்கும் நடத்த வேண்டும் என்பதும் அந்த முறையிலேதான் போக வேண்டும் என்பதும் அவசியமற்றதாகும்.

மற்ற நாட்டிலே இருக்கிற நிலைமை வேறு;  இந்த நாட்டு நிலைமை வேறு.  அதாவது, இந்நாட்டில் தொழிலாளிகள் என்பவர் பிறவித் தொழிலாளிகள் ஆவார்கள்.  இப்படிப் பிறவித் தொழிலாளி யாக்கி வைத்து, அவர்களைத் தலையயடுக்க வொட்டாமல் - மாற்ற மடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மற்றொரு சாதியார்.  அந்தச் சாதிதான் இன்று ஆட்சியிலும் தொழிலாளர் தலைமையிலும் இருந்து வருகிறது.  இன்று தொழிலாளர் நலமாக இருவரின் "சதிதான்' இருந்து வருகிறது.

இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை.  மார்க்ஸும், லெனினும் "சதிக்கென்று' ஒரு சாதி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள்.  ஆதலால் அவர்கள், சதிகாரர்களின் சதிச் செயலுக்கும், தொழிலாளர் சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் பரிகாரம் சொல்ல வேண்டிய அவசியமில்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள்.

ஆதலால், தொழிலாளி பேதம் மட்டுமல்லாமல் முதலாளித் தன்மையில் சாதி உயர்வு Š தாழ்வு பேதம் நடப்பு இருக்கிற போதும், அதைப் பாதுகாக்க ஒரு சாதி இருக்கிற       போதும், அவர்கள் தொழிலாளர் கிளர்ச்சியை நடத்துகிற போதும் Š "மார்க்ஸ்


சொன்னபடிதான் செய்ய வேண்டும்;  லெனின் என்ன சொன்னாரோ அந்தப்படிதான் செய்ய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?  இது சதிகார சாதிக்குத்தான் அனுகூலம், மார்க்ஸேதான் தொழிலாளர் பிரச்சினைக்கு முடிவானவரா?  அல்லது வெனினே கடைசியானவரா?  நாளுக்கு நாள் நடப்பும் கருத்தும் மாறிக் கொண்டே வருகின்றனவே!  சாதியின் பேரால் தொழிலாளர் சமுதாயம் இருக்கக் கூடாது என்கின்ற கிளர்ச்சியே 1925Šல் தானே துவக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  இந்த நிலையில் மார்க்ஸும் லெனினும் முக்கால முணர்ந்த தீர்க்க தரிசிகளா, அவர்களுடையதே முடிவு என்று சொல்ல?  மதவாதிகள்?

பார்ப்பனர்கள் எப்படி மகாவிஷ்ணு, பரமசிவன் என்று சொல்கிறார்களோ அப்படியா பகுத்தறிவு வாதிகள். மார்க்சிஸ்டுகள் சொல்லுவது?  காலம் வேறு;  ஆட்சி வேறு.  அங்கு முதலாளி ஆளுகிறான்.  இங்கு பார்ப்பான் ஆளுகிறான்.  பண்டித நேருவும் இராஜாஜியும், இராமமூர்த்தியும் யார்?  கிரியும் கிருஷ்ணராவும் ஜெயப்பிரகாசும், குருசாமியும் யார்?  மற்றும் இரயில்வே மந்திரியும், தட்சிண இரயில்வேக்களின் எஜண்டும் யார்?

இதற்கும் தொழிலாளர் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களை யோக்கியர்கள் என்றோ அல்லது அறிவாளி என்றோ ஒரு நாளும்      சொல்ல முடியாது.  ஏன் இப்படிச் சொல்கிறேன்?  இந்த மாதிரித் தொழிலாளிக்குச் சம்பந்தப்பட்ட எல்லா ஸ்தானங்களிலும் - ஆட்சிக்குச் சம்பந்தப்பட்ட எல்லாத் தலைமைகளிலும் பார்ப்பனனே இருக்க வேண்டிய அவசியமென்ன?  இது அகஸ்மாத்தாக ஏற்பட்டதா?

அல்லது, பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியத்தினால் ஏற்பட்டதா கம்யூனிஸ்டுகள் தாம் இதற்குப் பதில் சொல்லட்டுமே!
"சாதி பற்றி - வகுப்பு பற்றி - பார்ப்பான் சதியைப் பற்றிப் பேசுவது பிற்போக்குச் சக்தி' என்று சொல்லி விடுவதே இவற்றிற்குப் பரிகாரமாகி விடுமா?  அல்லது மார்க்ஸ், லெனின் சொன்னபடிதான் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

மார்க்ஸ் நினைத்திருப்பாரா, இந்த நாட்டில் பார்ப்பனர்கள் என்கிற சதிகாரர்கள் செய்து வருகிற கொடுமைகளையும் புரிந்து வருகிற ஆதிக்கத்தையும் நடத்துகிற சதித் திட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சொந்த மக்கள் பிறவிச் சூத்திரர்களாக்கப்பட்டு, வேசி மக்களாய்க் கருதப்படுகிற நிலைமையையும் பற்றி?  அதற்கு ஏற்ற மதம், சாஸ்திரங்கள் கடவுள்கள் பற்றி?  ஆதலாலேயே, அவர் அந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி நிலவி வந்த முதலாளித்துவம், அதன் ஆதிக்க முறைகள், அவைகளுக்கு மதம் அளிக்கும் ஆதரவு பற்றிச் சொல்லிப் போனாரே தவிர, இந்த நாட்டைப் பற்றி Š பாவம், அவர் என்ன கண்டார்?

-  விடுதலை, சொற்பொழிவு, 20.09.1952

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...