செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இந்து - தமிழர் சூத்திரரா?


திராவிட நாட்டிலுள்ள திராவிட இந்துக்கள் ஆதிதிரா விடர்கள் உள்பட தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடியர்கள், மலையாளிகள் ஆகியவர்கள் சமுதாயத்தில் தங்களைக் கீழான ஜாதி என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) அழைத்து இழிவுபடுத்துவதைப் பற்றி மிகமிக ரோஷப்படு கிறார்கள்.

சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி, உன்னை எவனாவது சூத்திரன் என்றால் நீ அவனை மிலேச்சன் என்று கூப்பிடு என்றெல்லாம் உணர்ச்சி வார்த்தைகள் சொல்லு கிறார்கள்.

வெள்ளைக்கார ராஜ்ஜியம் ஏற்பட்டு 200 வருஷமாகி இன்னமும் சூத்திரராய்த் தீண்டத்தகாதவராய், ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவராய் இருக்கிறோமே என்று சர்க்கார் மீதும் பாய்கிறார்கள், இது சரியா? இதற்குக் காரணம் பார்ப்பனரும் சர்க்காருமா? அல்லது நாம்தானா? என்பதை நன்றாய்ச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

ஒரு மனிதர், அவர் சர் ஆனாலும் சரி, ராஜா சர் ஆனாலும் சரி, மகாராஜா சர் ஆனாலும் சரி, ஸ்ரீலஸ்ரீ மகா சன்னிதானம் ஆனாலும் சரி, இன்னும் யாராயிருந்தாலும் சரி, இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு, அந்தப்பட்டியில் பதிவாகி, இந்து மத சம்பிரதாயப்படி தங்கள் சமுதாய, குடும்ப, ஆசார, அனுஷ்டான பூசை காரியங்களைச் செய்து கொண்டும் வந்தால் அந்த இந்துமத முறைப்படி இவர்களைச் சூத்திரன் என்று அல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது? சமுதாய முறையில் இவர்களை எங்கு நிறுத்தி வைப்பது? என்பதை ஒவ்வொரு திராவிட இந்துவும் யோசித்துப் பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இந்து மதம் என்பதற்கு இஸ்லாம் மதத்தைவிட, கிறிஸ்தவ மதத்தைவிட வேறு மாறுதல் என்ன என்று பார்த்தால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன் என்கின்ற பஞ்சவர்ண பேதம் அல்லாமல் வேறு என்ன முக்கிய வித்தியாசம் இருப்பதாய்ச் சொல்லக்கூடும்? கிறிஸ்தவ மதத்தில் சூத்திரன் இல்லை. இஸ்லாம் மதத்திலும் சூத்திரன் இல்லை. சூத்திரன் இருக்கும் மதத்தை எடுத்து நம் மீது போட்டுக் கொண்ட பிறகு சூத்திரப் பட்டம் தாங்க நாம் பயந்தால், வெட்கப்பட்டால் முடியுமா? கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்குப் பயந்தால் முடியுமா? என்கின்ற பழமொழிப்படி நம்மை இந்து என்று சொல்லிப் பெருமை அடைந்து கொண்டு அதனால் வரும் பட்டத்தைப் பார்த்து ரோஷப்படுவது எப்படி அறிவுடைமை யாகும் என்று கேட்கிறோம்.

திராவிட இந்துக்கள் இராமனையும், கிருஷ்ணனையும் கடவுளாகக் கொள்கிறார்கள். பட்டை பட்டையாக நாமம் தீட்டிக் கொள்ளுகிறார்கள். இராகு காலம், குளிகை காலம் பார்க்கிறார்கள்; பார்ப்பானைக் கொண்டு ஹோமம், எக்கியம் நடத்துவதுடன் பார்ப்பார் இல்லாமல் கருமாதி, ருது சாந்தி, பிள்ளைப் பேறு, காது குத்தல், திதி, திவசம், திருமணம் முதலியவை நடத்துவதில்லை. ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி, நரகசதுர்த்தி முதலிய இந்துமதப் பண்டிகைகள் செய்யாமல் இருப்பதில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்டு, பார்ப்பனன் நம்மைச் சூத்திரன் என்று கூப்பிடுகிறானே என்று ஆத்திரப்பட்டால் இதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனமான காரியம் என்ன இருக்க முடியும்? பார்ப்பான் நம்மைக் கண்டு சிரிக்காமலும் பரிதாபப்படாமலும் எப்படி இருப்பான்?

எனவே, இந்து மதத்தை நான் உண்மையாய் விட்டுவிட்டேன். அடியோடு இந்து மதத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று சொல்ல முடியாத ஒருவர் உண்மையில் சூத்திரராய் இருக்க முடியாமல் வேறு என்னமாய்த்தான் இருக்க முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். பிராமணன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? அப்படிச் சொல்லிக் கொண்டவர்களையாவது பார்ப்பான் சரியாய் நடத்துகிறானா?

கோவிலுக்குள் தன்னை விடமாட்டேன் என்கிறார்களே என்று ஒரு ஆதி திராவிடனோ, ஒரு திராவிட இந்துவோ கோபிப்பானேயானால், அவன் இந்து மதக் கோவிலுக்குள் இந்து மத ஆச்சாரச் சட்டம்தான் நடத்தப்பட வேண்டியது என்பது தெரியாதவனாய் இருந்தால்தானே கோபிக்க முடியும்? இன்று கோவில் இலாக்கா தலைவர் திவான் பகதூர் நாராயணசாமி பிள்ளை, அடுத்தவர் ராவ்பகதூர் ராமச்சந்திரன் செட்டியார்; இவர்களே அர்த்த மண்டபத்துக்கும் கர்ப்பகிரகத்திற்கும் வெளியில்தானே நின்று கொள்கிறார்கள். காரணமென்ன? இந்துக்கள் ஆன சூத்திரர்களுக் குள்ள இடந்தானே தங்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்ந்து தானே!

இப்படியே நான் ஒரு ஆதி திராவிட இந்து. எனக்கு சர்க்கார் சட்டப்படி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆதி திராவிடர் பாத்தியம் கொண்டாடுவாரேயானால் அவர் இந்து மத சட்டப்படி எட்டி நின்றுதானே ஆகவேண்டும்? அப்படியில்லாமல் இந்து மதத்தை விடமாட்டேன்; அதில் இருந்தால்தான் உத்தி யோகம், பட்டம், பதவி, பணம் கிடைக்கும்; ஆனால், சட்டத்தின்படி எனக்குள்ள யோக்கியதையை மாத்திரம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அது ஏய்க்கத்தான்  பயன்படுமே தவிர யோக்கியதையைப் பெறப் பயன்படுமா? என்று கேட்கிறோம்.

இப்படி ஒவ்வொருவரும் தன் சுயநலத்துக்காகச் சமுதாயத்தை ஏய்த்து வருவதால்தான் ஏதோ இரண்டொருவர் மாத்திரம்  சமுதாயத்தின் பேரால் கொள்ளையடிக்க முடிந்ததே தவிர, சமுதாயம் கீழான நிலையிலேயே சூத்திரனாகவும், பறையனாகவும் இருந்து வருகிறது. ஆகவே, நம்மைப் பார்ப்பான் சூத்திரன் என்றும், தீண்டப்படாதவன், புலையன் என்றும் அழைப்பதிலும், பார்ப்பதிலும் ஏதாவது தப்பிதம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம், திருத்திக் கொள்ளுவதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.


(13.11.1943-இல் வெளியான குடிஅரசு தலையங்கம்)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...