தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும், எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு
என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடேயல்லாமல், தமிழ்நாடு பிரிவினையையே கருத்தில்
கொண்டு அல்ல என்பதை முதலில் தெரிவித்துக்
கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும், திராவிடநாடு
என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல்
எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், திராவிடமே தமிழ் என்று மாறிற்று
என்றும், தமிழே திராவிடம் என்றும் மாறிற்று என்றும் சரித்திராசிரியர்கள்
முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து
அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.
உதாரணாக 1926-இல் டி.ஏ. சுவாமிநாதய்யரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் (Gem) டிக்ஷனரியில் 340-ஆம் பக்கம் 5-ஆவது வரியில் (Draveda) திராவிட என்பதற்குத் தமிழ்நாடு என்று தமிழில் அர்த்தம்
போட்டிருக்கிறது.
கேம்பர்ஸ் 20-ஆவது நூற்றாண்டு டிக்ஷனரியில் 282-ஆவது பக்கம் 2-ஆவது கலம் 5-ஆவது வார்த்தை.
திராவிடன் (Draveda) என்ற பதத்திற்கு ஆரியர்கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும்
தென் இந்திய மக்கள் என்றும், திராவிடம் என்பதற்குத் தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம்
என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.
1904-இல் லண்டனில்
பெயர்போன ஓர் ஆசிரியரால் பிரசுரிக்கப்பட்ட டிக்ஷனரியாக, டிக்ஷனரி ஆப்
இங்கிலிஷ் லாங்வேஜ் என்ற பெரிய டிக்ஷனரி அதாவது இப்போது உலகிலுள்ள எல்லாப்
பள்ளிக்கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புத்தகத்தின் 257-ஆவது பக்கம்
முதல்கலம் 4-ஆவது வார்த்தையாக இருக்கும் திராவிடன் என்கின்ற வார்த்தைக்கு
அர்த்தம் எழுதும்போது, திராவிடம்-ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு பழமையான மாகாணம் என்றும், தமிழன் -
(தமிழகம்) - ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய பாஷை அல்லாததைப் பேசுபவர்கள்
என்றும் எழுதியிருப்பதோடல்லாமல்,
இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.
மற்றும், அனேக அகராதிகளும், ஆராய்ச்சி நூல்களும் தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள்
என்றாலும் முறையே திராவிடம் திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே
ஒழிய வேறில்லை. இதில் தமிழ்நாடு என்பதும், தமிழர் என்பதும் காங்கிரஸ்காரர்கள்
பிரித்திருப்பதுபோல் ஒரு தனி இடத்தையும், ஒரு தனி பாஷையையும்தான் குறிக்கின்றது
என்று யாராவது கருதுவார்களேயானால்,
அல்லது அந்தப்படிதான் கருத நேரிடும் என்று
சொல்லப்படுமேயானாலும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்குப் பதிலாகத் திராவிட நாடு
திராவிடர்களுக்கே என்று லட்சியக் குறிக்கோள் வைத்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை
என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு,
இனி அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக