மகாநாட்டின் தலைவர் திரு.வி.வி. சீனிவாசையங்கார் அவர்களும் முன் பேசிய வரவேற்பு அக்கிராசனரைத் தழுவியே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதில் அவர் கொஞ்சகாலத்திற்கு முன்பு இந்தியாவில் பிரமுகர்களும், பாமர ஜனங்களும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் செய்திருக்கும் நன்மைகளைப் பாராட்டி இந்தியாவிற்குப் பிரிட்டிஷ் ராஜ்யத்தை அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவது வழக்கம் என்றும், ஆனால் இப்போது சுயேச்சையடைய பிரதிநிதி ஸ்தலங்கள் வேண்டுமென்று கருதி, மேல்நாட்டு ஜனநாயக ஸ்தாபனங்களை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்களென்றும், இது பெரிய தவறு என்றும் அதைவிட ஆபத்தான காரியம் வேறொன்றும் இல்லை என்பதாகத்தான் நினைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
சீர்திருத்தம் கோரும் எவரும் ஜனங்களுடைய தன்மையையும் பழைய அனுபவங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆதலால் நமக்குச் சீர்திருத்தம் கூடாதென்றும் சொல்லியிருப்பதோடு அதற்கு உதாரணமாக இப்பொழுது இதுவரை கிடைத்த சீர்திருத்தங்களில் பெருத்த அதிகார நிர்வாகம் மூன்றாந்தரமாக மனிதர்களிடம் போய் விட்டதென்றும், ஆதலால் அது கூடாதென்றும், இத்தேசத்திற்கு அருகதையில்லாத சீர்திருத்தம் கொடுக்கப்பட்டதால் இம்மாதிரி கஷ்டம் ஏற்பட்டதென்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே அதனாலும் பார்ப்பனர்களினுடைய சுயராஜ்ஜியம் என்ன என்பதும், எப்படியானால் அவர்களுக்குச் சுயராஜ்ஜியம் இஷ்டம் என்பதும், எப்படியானால் சுயராஜ்ஜியம் வேண்டாமென்பதும் இதனால் நன்றாய் விளங்கி விட்டது. தவிர, பிராணர்களிடம் மற்றவர்கட்கு ஏற்பட்டது துவேத்தினால் மதம், கடவுள் பல நூற்றாண்டுகளாக பிராமணர்கள் பாதுகாத்து வந்த கதைகள், பாரமார்த்தீக லட்சியங்கள் ஆகிய இவைகளுக்கு விரோதிகளாக பிராமணரல்லாதார் ஆகிவிட்டதாகவும் மிக்க வருந்துகிறார். ஆகையால் இவைகளைக் காப்பாற்றத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார். அதோடு சுயமரியாதை இயக்கம் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இனித் தூங்கிக் கொண்டிருந்தால் காரியங் கெட்டுப் போகுமென்றும் மிக்க வருந்துகிறார். அதோடு ரு´யாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்களும் பலர் இருக்கிறார்களென்றும் மிக்க ஓலமிடுகிறார். ஆகவே பிராமண மகாநாடு என்பதும் பிராமனியம் என்பதும் வேதம். கலை, ஆத்மார்த்தம் என்பதும் பார்ப்பனர்களால் எதற்காகக் காப்பாற்றப்படுகிற தென்பதும் இப்போதாவது பொதுஜனங்கள் அறியலாமென்று நினைக்கின்றோம்.
இதை நம்மவர்களிலேயே உள்ள சில பண்டிதர்களும், அழுக்கு மூட்டைகளும், வெறுந்தலைப் பணக்காரர்களும் தெரிந்திருந்தாலும் அப்பார்ப்பனர்களுக்கு அஞ்சித் தங்கள் வயிறு வளர்ப்பதையும், போலி கெளரவத்தையும் உத்தேசித்து அவர்களோடு கூடவே அவர்கள் ஆட்டத்திற்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஆதலால் மற்றவர்களாவது இந்த சூழ்ச்சியையறிந்து பார்ப்பன ஆயுதங்களுக்குக் கழுத்தைக் கொடுக்க மாட்டார்களென்று நம்புகிறோம். தவிர, பிராமணர்கள் தங்களுடைய பிராமனியத்தை விட்டு விட்டதினாலும் வேதம் படிக்காததினாலும், ஆத்மார்த்தத்தைக் கருதாததினாலும் தங்கட்கு இம்மாதிரி கஷ்டம் வந்திருப்பதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த வியத்தில் நாம் சிறிதும் ஆட்சேபணையோ, தடங்கலோ செய்வதில்லை என்பதை நாம் உண்மையாகவே பார்ப்பனர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு பார்ப்பனரும் இப்போது அவர்கள் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேதம் படிக்கப் போவதையும், மூன்று வேளை குளித்து விட்டு, ஆறுகாலம் சந்நியாவந்தனம் செய்வதையும், காயத்ரியை ஜபிப்பதையும், பிராணாயாமம் பண்ணுவதையும் நாம் சிறிதும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது வியத்தில் நமக்கு எவ்வித நஷ்டமுமில்லை. ஆனால், அதற்காக நம்மை வந்து காசு கேட்கக் கூடாதென்றும், இந்தக் காரியங்களுக்காக இவர்களுக்கு நமது மூடசிகாமணிகள் பிச்சைக் கொடுக்கக் கூடாதென்றும், வெட்டியில் சோறு போடக் கூடாதென்றும், பார்ப்பனரல்லாத மேற்படி மூடசிகாமணிகளை மாத்திரம் வேண்டிக்கொள்ளுகிறோம்.
- குடிஅரசு, தலையங்கம், 08.06.1930
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக