அகதிகள் முகாம்களில் முள்வேலிகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழர்கள். வேளைக்கு உணவு இல்லை; குடிக்கவோ நீரில்லை, ஒண்டு குடிசையில் உட்காருவதற்கு இடமில்லாத அளவுக்கு நெரிசல், கழிவிடங்களோ கேட்கவே வேண்டாம். அய்.நா.
பொதுச்செயலாளர் பான் கீ மூனும், இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் பார்த்து கண்ணீர் வடித்திருக்கின்றனர்.
ஆனால், இந்து ராமுக்கு மட்டும் இவையெல்லாம் தெரியவே தெரியாது; முகாம்களில் தேனாறும், பாலாறும் பொங்கி நுரை தள்ளி ஓடுவதாகக் கூறுவார். இந்து ராம் முன்மொழிந்ததை, துக்ளக் சோ வழிமொழிவார். காரணம், இனம் இனத்தோடு சேர்கிறது.
விளையாட்டுக்கல்ல, இதே இந்து ஏட்டில் (31.8.1983) அதன் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படையில்தான் கூறுகிறோம்.
இலங்கை அதிபர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனேயிடம் மேற்கு வங்கப் பத்திரிகையாளர் (அமிர்தபஜன் பத்திரிகை) ஒருவர் பேட்டி கண்டார்.
ஜெயவர்த்தனே: நீங்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த பூமியிலிருந்து வந்திருக்கிறீர்கள்: எனவே சிங்களவர்க்குள்ள ஆரிய இனத் தொடர்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இங்கே உள்ள மைனாரிட்டிகளான தமிழர்கள் திராவிட இனத் தொடர்புடையவர்கள். சிங்களவர்களின் ஆரிய இனத்தைச் சார்ந்த வங்காளியான உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று அதிபர் ஜெயவர்த்தனே மிக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
இந்தப் பேட்டியின் அடிப்படையில் இந்து ஏட்டின் செய்தியாளர் எஸ். பார்த்தசாரதி தம் கட்டுரையில் என்ன எழுதியிருக்கிறார்?
சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தமிழர் சிங்களர் போராட்டத்தை ஆரியர் திராவிடர் போராட்டமாகவே கூறுகிறார்கள். படித்த சிங்களவர்களின் எண்ணம்கூட எந்த வழியில் செல்கிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு.
இப்படி சொல்வது விடுதலையல்ல இந்து ஏட்டில்தான் (31.8.1983) கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்து ராம்,
துக்ளக் சோ, தினமணி வைத்தியநாதய்யர் வகையறாக்கள் எப்படி ஈழத் தமிழர்ப் பிரச்சினையை அணுகுவார்கள் எழுதுவார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை.
தமிழர் முகாம்கள்பற்றி உண்மைக்கு மாறாக அவர்கள் எழுதுவது அவாளுக்கே உரிய தமிழின வெறுப்புதான்.
விரைவில் தமிழர்கள் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று உலகத்தை ஏமாற்றிட அதிபர் ராஜபக்சே சொல்லிக் கொள்வார். இடையிலே எதையாவது கிளப்பிவிட்டுப் பிரச்சினையைத் திசை திருப்பி விடுவார்.
இப்பொழுது என்ன தெரியுமா? தமிழர்கள் முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப்புலிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று போதாதா காலத்தை நீட்டித்துக் கொண்டே போக!
ஒன்று மட்டும் உண்மை! உரிமையும், தன்மானமும் நசுக்கப்படும்பொழுது புழுக்களாகவே எப்பொழுதும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே! புலிகளாக ஆவதும் தவிர்க்கப்பட முடியாததுதானே!
ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரசின் கையில்தானிருக்கிறது!
31.07.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக