1931 ஆகஸ்டில் விருதுநகரில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் மூன்றாவது தீர்மானம்:
பெண்கள் வைத்தியத் தொழிலுக்கும், உபாத்-தியாயத் தொழிலுக்கும் மாத்திரம் தற்போது எடுக்கப்படுவது போதாது. அவர்களைப் போலீஸ் இலாகாவிலும், இராணுவத்திலும் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.
யாரும் கனவுகூடக் காணாத அந்தக் கால கட்டத்தில் இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு தீர்மானம் என்று நினைக்கும்பொழுது, நமது கண்களின் உணர்ச்சிக்
திவலைகளில் தந்தை பெரியார் முறுவலிக்கிறார்.
இன்றைக்கு காவல்துறையிலும், இராணுவத் துறையிலும் பெண்கள் ஒளிர்கின்றனர். தமிழ்நாட்டுக் காவல்துறைக்குத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.)
கூட ஒரு பெண்தான்!
இந்தியாவின் இராணுவத் துறையிலும், குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரிகள் மட்டத்திலும் பெண்கள் செம்மாந்து காணப்படுகின்றனர்.
ஆனாலும், நமது ஆண் ஆதிக்கச் சமூக அமைப்பு பல முட்டுக்கட்டைகளைப் பெண்களுக்குப் போட்டு வருகிறது.
இராணுவத்தில் பெண்களை நிரந்தரமாக்குவது என்பது செயல்படுத்தக் கூடியதல்ல என்று இராணுவத் துறை சொல்லுகிறது என்றால், அடடே,
மனுதர்மம் இராணுவக் கூடாரத்திலும் தன் விஷக் கொடுக்கை நீட்டியுள்ளதே என்று அலமர வேண்டியுள்ளது.
இவ்வளவுக்கும் இந்தப் பிரச்சினை டில்லி உயர் நீதிமன்றம்வரை சென்றது. பெண்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பும் கூறப்பட்டது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும்கூட இந்திய இராணுவத்தின் தலைமை இப்படி ஒரு கருத்தைக் கூறுகிறது என்றால், சட்டத்தைக் கடந்துகூட பெண்களை மட்டந்தட்ட துடியாய்த் துடிக்கிறது இந்திய இராணுவம் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை இராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான உள்கட்டமைப்புகள் இல்லையென்று இராணுவத் தலைமை பதில் மனு தாக்கல் செய்யப்போகிறதாம்.
பாரத மாதா புத்திரர்கள் காக்கி உடை வீரத் தாய்க்குலத்தைக் கூட மனுதர்மப் பேழையில் வைத்துப் பத்திரமாகப் பூட்டித்தான் வைப்பார்களோ!
14.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக